பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

235

அன்றிருந்திருந்தால், தகடூர் யாத்திரை போன்ற, ஆனால், அதுபோல் சிதைந்தழியாத, ஒரு காந்தளூர்க் காவியத்தை நாம் பெற்றிருக்கக்கூடும்!

காந்தளூர்ப் போரிலே சேரனுடன் ஏற்கெனவே பாண்டிய நாட்டில் தோற்று நாடிழந்த பாண்டியன் அமரபுயங்கனும் சேர்ந்து போராடினான். போர் முடிவில் இரண்டரசர்களின் பெருஞ் செல்வக் குவை மட்டுமன்றி, அவர்களின் இரு முடிகளும் கைப்பற்றப்பட்டன. இவ்வெற்றி காரணமாகவே 'மும்முடிச் சோழன்' என்ற பட்டத்தைச் சோழன் முதன்முதலாக மேற்கொண்டான். இராசராசன் என்ற பெயர் அவன் காலமுதல் இன்றுவரை அவனது இயற்பெயர்போல வழங்கினாலும், இப்போரின் பின் அவனுக்கு நிலையாக வழங்கிய வழக்கேயாகும். காந்தளூர்ப் போர் என்ற பெரும்போரின் பயனாகவே இராசராசன் தமிழக முழுமுதலரசனாகவும், தென்னாட்டின் தலைமையரசனாகவும் ஆய்விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

உதகை அழிவு

காந்தளூரையும் சுற்றுப்புறங்களையும் எங்கும் அழித் தொழித்த வண்ணமாகவே சோழர் படைகள் கடுஞ்சீற்றத்துடன் தூதன் சிறைப்பட்டிருந்த உதகை நோக்கிச் சென்றன. சூளிகை களும் மாளிகைகளும் நிறைந்த உதகைக் கோட்டையையும் நகரையும் சோழர் சுக்குநூறாக்கிப் பொடி படுத்தினர். எதிர்த்துச் சாம்பலாக்கினர். சிறையை உடைத்துத் தூதனை அரசன் சென்று விடுவித்தான். இம்பெருஞ் செயலைச் சோழர் காலக் கவிதைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

“தூதற் காப்

பண்டு பகலொன்றில் ஈரொன்பது 'சுரமும்’ கொண்டு மலைநாடு கொண்டோனும்”.

(விக்கிரம சோழன் உலா: 32 -34)

“ஏறிப்பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை

நூறித் தன் தூதனை நோக்கினோன்”

(குலோத்துங்க சோழன் உலா: 46 -48)