பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(238

அப்பாத்துரையம் - 16

வென்ற நாட்டிலிருந்து வெற்றிச் சின்னங்களுள் ஒன்றாக அவன் மரகதப் படிமம் ஒன்று கொணர்ந்து திருப்பூவனக் கோயிலில் சேர்த்தான் என்றும் அறிகிறோம்.

பாண்டி நாட்டு வெற்றி

சேர நாட்டுக்குச் சோழப் படைகள் செல்லும் வழியிலேயே, பாண்டியன் அமரபுயங்கனைச் சோழர் போரில் முறியடித்துப் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக்கொண்டனர். இதன் பயனாக இராசராசன் ‘செழியரைத் தேசுகொள் கோவி ராசகேசரி வர்மன்' என்ற நீண்ட விருதுப் பெரும் பெயர் மேற்கொண்டான். 'பாண்டிய குலாசனி' (பாண்டியர் மரபுக்கு அசனி அல்லது இடி) என்ற பட்டமும் இப்போரின் பயனாகவே அவனுக்குச் சூட்டப்பட்டது.

இப்போர் பற்றிய குறிப்புகளில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியர்கள் பலராகக் காணப்படுகின்றனர். அமர புயங்கன் தலைமையில் ஐந்து பாண்டியர்கள் ஆண்டிருக்கலா மென்று தோற்றுகிறது.

பாண்டிய நாட்டில் இதுவரை சோழர் அடைந்த வெற்றி களுக்கும், இராசராசன் அடைந்த வெற்றிக்கும் பெருவேறுபாடு உண்டு. வென்ற நாடுகள் எங்குமே வென்றவர் நேரடி ஆட்சியை வகுத்த முதல் தமிழ்ப் பேரரசன் இராசராசனே. பாண்டிய நாட்டை சோழப்பேரரசின் ஒரு மண்டலமாக்கி, அதற்கு அவன் இராசராச மண்டலம் என்ற புதுப்பெயர் சூட்டுவித்தான். இதுபோலவே பேரரசின் மற்ற இடங்களும் மண்டலங்களாக்கப் பட்டு அவன் விருதுப் பெயர்களில் ஒன்று மண்டலப் பெயராக வழங்கிற்று.

பல நாடுகளும் வளநாடுகளும், பல நகரங்களும் நகரத் தெருக்களும் இவ்வாறு பேரரசர் வெற்றிப் பெயர், விருதுப் பெயர்களாக மாற்றப்பட்டதும் இராசராசன் காலத்திலேயே ஆகும். தமிழக அரசர்களில் அவனை ஒத்த புதுக்கருத்துவளம் மிக்க அரசர்கள் முன்னும் இருந்ததில்லை. பின்னும் இருந்ததில்லை என்னலாம்.