தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
301
பேரரசன் செயலைக் குறிப்பதாகலாம். இரண்டாம் இராசராசன் பெயர் அம்மரபில் வந்த செயலாகவே காணப்படுகிறது.
பாண்டியர் உள்நாட்டுப் போர் 1 : ஈழ - சோழ பாண்டியப் போட்டி 1167 - 1175
-
வடலி, பராக்கிரமபுரம், குண்டானிகா, அமராவதி, தொண்டி, பாசிப்பட்டணம் போர்கள்
சடையவர்மன்
குலசேகர பாண்டியன்
1161-ல்
அரியணையேறினான்.அவன் திருநெல்வேலியிலிருந்து கொண்டு பாண்டி நாட்டின் தென் பகுதியை ஆண்டு வந்தான். அதே சமயத்தில் வடபாதியை மதுரையி லிருந்து கொண்டு பராக்கிரம பாண்டியன் என்ற மற்றொரு பாண்டியன் அரசாட்சி செய்து வந்தான். இருவருக்குமிடையே எக்காரணத்தாலோ போட்டியும் பூசலும் எழுந்தன. அதன் பயனாக, குலசேகரன் பராக்கிரமனை மதுரையில் முற்றுகை யிட்டுத் தாக்கினான்.
முற்றுகையைச் சமாளிக்க முடியாமல், பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யும்படி இலங்கையரசன் பராக்கிரமபாகுவுக்கு வேண்டுதல் விடுத்தான். பராக்கிரமபாகு இலங்கையின் பெரு வேந்தன், பெரியான் என்று விதந்துரைக்கப் பட்டவன். மற்றத் தமிழக அரசர்களைப் பின்பற்றிக் கடற்படை ஏற்படுத்திக் கொண்ட முதல் அரசன் அவனே. பாண்டிய சோழரைப் போலவே அவனுக்கும் கடல் கடந்த ஆட்சியில் ஆர்வம் உண்டாயிற்று. அவன் உதவி செய்ய இணங்கி, இலங்காபுரன் என்ற படைத்தலைவனுடன் ஒரு பெரிய இலங்கைப் படையைப் பாண்டி நாட்டுக்கு அனுப்பினான். ஆனால், அது வந்து சேருவதற்குள், குலசேகரன் முற்றுகையை முறுக்கினான்.பராக்கிரமனையும் அவன் மனைவி மக்களையும் கொன்றழித்துத் தன்னையே பாண்டி நாடு முழுமைக்கும் அரசனாக மதுரையில் முடி சூட்டிக் கொண்டான்.
பராக்கிரமன் குடும்பத்தில் கொலைக்குத் தப்பியது அவன் புதல்வன் வீரபாண்டியன் என்ற ஒரு சிறுவன் மட்டுமே, அவனை உறவினர் சிலர் எப்படியோ ஒளித்துக் காத்து, பல இடங்களில் சுற்றித் திரிந்த பின், இறுதியில் பொதிகைமலையில் வைத்துப் பேணினர்.