தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
25
பேணிவந்தனர். இராவணனின் வானவூர்தி, சிந்தாமணியின் பறக்கும் குதிரை, அராபிக் கதைகளில் வரும் மாயக் கம்பளங்கள், மந்திரங்கள் ஆகியவை படிப்படியாக அழிந்துவந்த பண்டை நாகரின் விஞ்ஞான அறிவின் கனவுலகத் துடிப்புகளே என்னலாம்.
அந்நாளில் விசையூர்திகள், பறவையூர்திகள், விசைச் செய்திகள் முதலிய பல புதுமைகள் செயலிலேயே நிலவின என்பதைப் பண்டிதமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ள சுக்கிரநீதி ஐயத்துக்கிடமில்லா வகையில் குறிப்பிடுகிறது. அதை இயற்றிய சுக்கிராச்சாரியார் அசுரகுரு என்று பின்னாட்களில் கருதப்பட்டுவிட்டார் என்பதும், தென்னாட்டுப் பேரரசன் மாவலிவாணனுக்கு அவரே அமைச்சரும் குருவும் ஆவார் என்பதும் குறித்துக் காணத்தக்கன. எனவே பறக்கும் கோட்டை முதலியன தமிழர் கனவானாலும்
நாகர் கனவின் நிழல்களேயாகக்கூடும்.
நாகர் வாழ்வு பற்றிய மெய்ம்மரபுகளைப் போலவே புராண மரபுகளால் மறைக்கப்பட்ட மற்றொரு வரலாற்றுக் கூறு மாவலி மரபு அல்லது வாண மரபு ஆகும்.
வாண மரபு
மாவலி ஒரு கொடிய அரக்கன் என்றும், திருமாலின் எதிரி என்றும், திருமாலின் வாமன அவதாரத்தால் கொன்றொழிக் கப்பட்டவன் என்றும் பாகவதபுராணம் கூறுகிறது. ஆயினும் வியத்தகு முறையில் திருமால் பக்தர்களேயான திருவாங்கூர், கொச்சி அரசர்கள் இன்றளவும் தம்மை மாவலியின் மரபினர் என்று கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர். இது மட்டுமோ? மலையாள நாட்டுப் பொதுமக்கள் மாவலியின் நல்லாட்சியின் நினைவாகவே தம் தேசிய சமுதாய விழாவாகிய திருவோணத்தை ஆண்டுதோறும் இன்றும் கொண்டாடி வரு கின்றனர். தென்னாடெங்கும் ஒரே மொழி நாடாகக் கொண்டு ஆண்ட பேரரசன் என்றும் அவனைக் குறிக்கின்றனர். மலையாள நாடு மட்டுமன்றிப் பண்டைத் தமிழகம் முழுவதுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இவ்விழாவைக் கொண்டாடியதாக அறிகிறோம்.