பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 16

மணிமேகலையில் கிள்ளிவளவனின் பட்டத்தரசியான சீர்த்தியும், தஞ்சைவாணன் கோவையில் அதன் பாட்டுடைத் தலைவனும் மாவலி மரபினரே என்று காண்கிறோம். மற்றும் மாவலியின் மகன் வாணன் பெயரால் அவன் மரபினர் வரலாற்றில் தம்மை வாணர் என்றே குறித்துக் கொள்கின்றனர். அவர்கள் மாவலியைப் போல என்றும் பேரரசராக வாழா விட்டாலும், அந்த எண்ணத்தை ஏழேழு தலைமுறைகளாக மறக்கவில்லை ஏனெனில் வாணர் மரபின் குடிகளும் கிளைக்குடிகளும் வல்லமை வாய்ந்த சிற்றரசர்களாகத் தமிழகத்திலும் தென்னாட்டின் பல பல திசைகளிலும் சங்க கால முதல் பிரிட்டிஷ் வாணிகக்குழு ஆட்சிக் காலம்வரை இரண்டாயிரம் ஆண்டு இடையறா ஆட்சி நடத்தினர். எத்தனையோ அரச பேரரச மரபுகள் தோன்றி வளர்ந்து மறைந்த போதும் அவர்கள் அவ்வளவு காலமும் அழியாமல் தம் மரபும் பெருமையும் காத்து வாழ்ந்தனர். எண்ணற்ற பல கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன.

நம் வரலாற்றாராய்ச்சி ஒளியோ, நமக்கு இன்று அழியாது மீந்துள்ள தமிழிலக்கிய ஒளியோ சென்றெட்டாத தொல் பழங் காலத்தில், மாவலி தென்னாட்டெங்கும் ஒரு குடைக்கீழ் ஆண்ட பேரரசனாயிருந்திருக்க வேண்டும் என்பதை இவ்வரலாற்றுத் தடங்கள் காட்டுகின்றன. ஆனால், புராண மரபின் மாயவண்ணம் இவ்வுண்மையின் தடத்தின்மீது ஆராய்ச்சியாளர் கண்ணொளி கூடப் பரவாமல் தடுத்து வருகின்றது.

பாரத இராமாயண மரபுகள்

புராண மரபைவிடத் திண்ணிய திரையிட்டுள்ளது இதிகாச மரபு, புராண மரபு மயங்க வைக்கிறது என்றால், ஆராய்ச்சியறிஞர்கள்கூடச் செய்திகளைத் திரித்துணருமாறு

செய்கிறது.

இராமாயண பாரதக் கதைகள் சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும், சங்க இலக்கியங்களிலும் பல விடங்களில் சுட்டிக் குறிக்கப்படுகின்றன. ஆனால், கதையுடனன்றி, கதை நிகழ்ச்சி