பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. அகல் உலகத் தொடர்பு

போர் என்பது இடைக்காலப் புராண மரபில் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால்வகைப் படைகளின்போர் மட்டுமே. இது முற்றிலும் நில மீது நடைபெற்ற போர் என்பது தெளிவு.இது கடந்து இடைக்காலக் கனவுகள் கூடச் செல்லவில்லை கடலறியாத, வானகங்கனவு காணாத சில நாகரிக இனங்களின் சின்னமாகவே இம்மரபு இயன்றது. ஆனால், உலகின் புராண காலத் தொடக்கத்திலும், தமிழர், கிரேக்கர் வரலாற்று வானவிளிம்பிலும் நாம் நிலப்போர், கடற்போர், வானகப்போர் என்ற இக்கால மூவரங்கப் போர்களின் சின்னங்களையும் காண்கிறோம். நில உலக நாகரிகங்கள் பலவற்றுக்கு முற்பட, கடலகத்தே பரவி, வானக மளாவி வளர எண்ணிய சில பல பழமைசான்ற நாகரிகங்கள் இருந்தன என்பதை இது குறித்துக் காட்டுகிறது.

நாலாயிர, ஐயாயிர ஆண்டுகட்கு முன் வானகப்போரும், வானகச் செலவும் கனவிலேனும் நிலவின என்பதை எவரும் ஒத்துக்கொள்வர். அதே சமயம் தற்கால உலகில் மேலை நாடுகளிலேனும் இக்கனவுகள் காணப்பட்டது சென்ற இரு நூறு ஆண்டுகளுக்குள்ளேயே என்பதும், அவற்றின் பயனாகவே நாம் நீராவிக்கப்பல்கள், விசையூர்திகள், வானூர்திகள், தந்தி, தொலைபேசிகள் பெற்றிருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கன. முற்காலக் கனவுகள் கனவுகளாகவே நின்று கனவு மரபும் அழிவுற்றதற்கு இடைக்காலப் பண்பே காரணம் என்னல் வேண்டும். அது அக்கனவுகளை மனித அருஞ் செயல் கனவுகள் என்ற நிலையிருந்து படிப்படியாக மாயமந்திரங்கள், தெய்விக அருஞ் செயல்கள், பேய்ச் செயல்கள், அரக்க பூதச் செயல்கள் என்ற நிலைக்கு ஒதுக்கித் தள்ளிற்று. வருங்கால ஆர்வக் கனவுகளாய் வளராமல், சென்ற கால நினைவுகளாய்,