பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

35

களும் இருந்திருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு.இதனைத் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் மரபுரை சுட்டிக் காட்டுகிறது. இச்செம்பியன் காலத்திய பறக்கும் கோட்டைகள் அல்லது பறக்கும் நகரங்கள் தமிழர் கனவில் அல்லது நினைவில் எழுந்த முதல் வானகப் போராக நம் கண்முன் காட்சி யளிக்கின்றன.

ஒரு வானகப் போருடன் தொடங்கும் தமிழர் வரலாறு அடுத்து ஒரு கடலகப் போரையும் தொடக்கத்திலேயே நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது.

முதற் கடற்போரும் கடற் பேரரசும்

வான விளிம்பு கடந்து, ஆனால், அவ்விளிம்பிலே மயங்கும் இலக்கிய மரபிலே, நாம் தமிழரின் இப்பெருங் கடலகப்போரின் தடத்தைக் காண்கிறோம். அது தடங்கெட்ட இன்றைய தமிழர் வாழ்வுடனேகூடத் தொடர்புடையது என்று கூறலாம். அது பற்றிய இலக்கியக் குறிப்புகளும் மரபுரைகளும் பல. அதற்கு ஆக்கம் தரும் பிற்கால இடைக்கால வரலாற்றுச் செய்திகளும், கல்வெட்டுச் சான்றுகளும்கூட உண்டு, ஆயினும் இவற்றாலும் அத்தொல் பழங்காலச் சித்திரத்தின் முழு உருவத்தை நாம் தெளிவாகக் காணமுடியவில்லை, காணும் அளவிலும் ஆராய்ச்சியாளர் கருத்து வேறுபாடுகளும், அவர்களது ஆராயா நம்பிக்கை அவநம்பிக்கைகளும் அதன் உருவின் மீதே நிழலாடுகின்றன.

சங்க இலக்கியத்திலே பழங்காலப் பாண்டியருக்கும், அவர்கள் முன்னோருக்கும் முற்பட்டபாண்டியனாக நெடியோன் விளங்குகிறான். கடைச் சங்க காலத்திலே பாடல் சான்ற பெரும் புகழ்ப்பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனே. அவன் முன்னோர்களாக மதுரைக் காஞ்சியாசிரியர் மாங்குடி மருதனார் பல்சாலை முதுகுடுமியையும் நெடியோனையும் சிறப்பிக்கின்றார். அதே சமயம் முதுகுடுமியைப் பாடிய நெட்டிமையார் முதுகுடுமியின் முன்னோனாக அவனைக் குறிக்கிறார். எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அது கடந்தும் மிகப்பழங்காலத்துப் பாண்டியனாகவே நெடியோன் கருதப்பட்டிருந்தான்.