பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 16

கற்களாய் உள்ளன. எடுத்துக்காட்டாக, கி.மு.2000 ஆண்டள விலேயே எகிப்தியர் ‘பண்ட்' என்ற நாட்டையும் ‘அதிலுள்ள 'ஓவிர்' என்ற துறைமுகத்தையும், அதனருகே கிடைக்கும் தங்கம், தேக்கு, மணப் பொருள்கள் ஆகியவற்றையும் பற்றிக் கூறுகின்றனர். அந்த நாட்டையே தங்கள் மூலத்தாயகமென்றும் குறிக்கின்றனர். பண்ட் என்பது பாண்டிநாடு என்பதும், ‘ஓவிர்’ என்பது 'உவரி' என்ற தென் பாண்டி நாட்டுத் துறைமுகம் என்பதும் மேலீடாகவே தெள்ளத் தெளிவாக விளங்கும் செய்திகள் ஆகும். கோலார் தங்கவயல் சங்க காலத்திலும் சிந்துவெளி நாகரிக காலத்திலும் தொழிற் பட்டிருந்த செய்தி இதனை வலியுறுத்தும். ஆனால், 'வெண்ணாட்டறிஞர்' அதை அபிஸினியாவிலோ, தென்ஆப்பிக்காவிலோ தம் கற்பனைக் கோல்கொண்டு கிளறித் தேடுகின்றனர்.

பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பேர்களும் இது போலவே நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட உலகெங்கும் காணப்படுகின்றன.

உரோமப் பேரரசர் காலங்களில் மேலை நாடுகளில் தமிழகம் வாங்கிய சரக்குகளைவிட அங்கே அனுப்பிய சரக்குகளே மிகுதியாயிருந்ததால் மேலை உலகின் தங்கம் முழுவதும் தமிழகத்திலேயே வந்து குவிந்தன. உண்மையில் தம்பட்ட சாலைகளில் அடிக்கப்பட்ட பொன் காசுகள் தமிழகத்துக் கென்றே அடிக்கப்பட்டன. உரோம் அழிந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அக்காசுகள் தமிழகத்தில் செலாவாணியில் நீடிக்குமளவு அவை தமிழகத்தில் செறிவுற்றிருந்தன. இவை போக, இன்றளவும், ஒருவேளை இனியும், எடுக்கப்படும் புதையல் பொற்காசுகள் அளவற்றவை.

சங்ககாலத் தமிழகத்தின் நகரங்களில், நாகரிக உலகின் எல்லா நாட்டவர்களும் வந்தும் தங்கியும் சென்றும் இருந்தனர். புதுச்சேரியில் உரோமக் குடியிருப்பு ஒன்று அண்மையில் அகழ்ந்து காணப்பட்டுள்ளது. முசிறியில் உரோமக்குடியிருப்புடன் உரோமப் படைத்தளமும், உரோமப் பேரரசர் அகஸ்டஸ் காலக் கோயிலும் இருந்ததாக மேலை நாட்டாசிரியர் குறிக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் உள்ள பன்மொழி மாந்தர் பற்றிப் பட்டினப் பாலை பகர்கின்றது.