வாழ்க
தொல்காப்பியர் வகுப்புமுறை
101
வாழ்வைத் தொல்காப்பியர் முப்பால்களாகப் பிரித் துணர்த்தினார். அவற்றுக்கு அவர் முதல், கரு, உரி எனப் பெயரும் வகுத்தார்.
முதல் என்பது வாழ்க்கையின் பின்னணிக் களமான இயற்கை. அது காலம் இடம் என்ற இருவகுப்புடையது. இரண்டின் பாகுபாடுகளும் திரிபுகளும் வாழ்வில் தம் பண்புகளைப் பதிப்பிக்கின்றன. காலம் தனி மனிதன் வாழ்வின் பெருங்கூறாகிய ஆண்டெல்லையில் செயலாற்றும் பெரும் பொழுதுகள் அல்லது பருவங்களும், சிறு கூறாகிய நாளெல்லை யில் செயலாற்றும் சிறு பொழுதுகள் அல்லது வேளைகளும் ஆகும். பெரும்பொழுதின் பயனாகவே மனிதனுக்குக் குளிரும் வெப்பமும், மழையும் வறட்சியும் மாறி மாறி வந்து காடும் பயிரும் தொழிலுக்குரிய சூழ்நிலைகளும் பிற இயற்கை வளங்களும் உண்டு பண்ணுகின்றன. சிறு பொழுதில் பகல் இரவு, காலை மாலை, நண்பகல் ஆகிய மாறுபாடுகளால் உயிர்க்கு ஓய்வு நேரம், உழைப்பு நேரம், இன்ப துன்பச் சூழல்கள் நேர்கின்றன.
கருப்பொருள் என்பது செடி கொடி உயிரினச் சூழல்களும், அவற்றின் பயனான விளைபொருள்களும், அவற்றால் மனிதன் ஆக்கிக்கொள்ளும் கருவிகளும் ஆகும். முதற் பொருள் சூழலில் விலங்கு நிலையிலிருந்த மனிதன், மனித நிலைக்கு முன்னேற உதவிய கருவிச் சூழல் இதுவே.
உரிப்பொருள் என்பது மனிதனுக்கே உரிய, மனித சமுதாயமே வகுத்துக் கொண்ட பொருள் ஆகும். அதுவே சமுதாய குடும்ப வாழ்வுகள். இதனையே புறம் என்றும் அகம் என்றும் தமிழர் வகுத்தனர். புறம் வாழ்க்கைத் தொழில்களையும், தொழிற் கருவிகளையும், கலைக்கருவிகளையும் உள்ளடக்கியது.
உரிப்பொருள்கள் வாழ்க்கைக் குறிக்கோள், அகம் புறம் என்ற வாழ்க்கை முறைகள், வாழ்க்கைப் பண்புகள் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.அகம் குடும்ப ஒழுக்கத்தையும் அதன் பண்புகளையும் உள்ளடக்கியது.
தொல்காப்பியர் வாழ்க்கைக் குறிக்கோள்கள் என மூன்று வகுத்துரைத்தார். அவை அறம், பொருள், இன்பம் என்பன.