வாழ்க
ஆதிபகவன்
129
எப்போதுமே வாழ்பவர் விழைவு ஒன்று. உலகின் பொது நோக்கமாக அறிஞர் அவ்வக் காலத்தில் வகுத்துக் காட்டுவது மற்றொன்று. இரண்டும் இரண்டு சாய்வரைகளாக இருவேறு கோணத்தில் செல்கின்றன. ஆனால், இரண்டு சாய்வரைகளும் இயற்கை வெளியில் ஒரு குறியில் சென்று கூடுகின்றன. இங்ஙனம் கூடும் வகையறிந்தே தமிழர் அதை வழிபடு குறிக்கோள் அல்லது வாழ்வின் குறிக்கோள் என வகுத்தனர்.
இவ்வழிபடு குறிக்கோள் காலத்துக்குக் காலம், வளர்ச்சிப் படிக்கு வளர்ச்சிப் படி மாறுபடுவது. ஆனால், இம்மாறுபாடு தொலை மாறுபாடும் உருவ மாறுபாடுமே. இடமாறுபாடோ, திசைமாறுபாடோ, பண்புமாறுபாடோ அல்ல. ஏனெனில், அவை ஒரே 'விழிவரை'யில் தோன்றுபவை. எனவேதான், குறிக்கோளை முதலில் கண்டுணர்த்தியவர் அதன் 'விழிவரை' முகப்பைக் காட்டியவர் ஆகிறார். அதனைப் பின்னால் காண்பவர், அனைவர்க்கும், காட்சி புதுக்குபவர்களுக்கும் அவர் ஒருங்கே ‘விழி’ ஆகிறார்.
வாழ்வின் இக்குறிக்கோள் இயல்பாகவே எல்லையற்றது. ஆதியந்தம் இல்லாதது; அளவில்லாதது. ஏனெனில், அது காண்பவர் காட்சிக்கும், அறிபவர் அறிவுக்கும், விழைபவர் விழைவுக்கும் ஏற்ப அமைவது. எனவேதான் அதனை முதலில் கண்டு மக்கட்கு உணர்த்திய மக்கட்குலத்தின் 'விழி'யை அல்ல ‘கண்’ போன்றவரைத் தமிழர் ‘ஆதிபகவன்' என்றனர். காண்பவர் என்பவர் எல்லாருமே வகுத்துக் காண்பவரே யாதலால், காண்பவர்க்கு அதாவது பகவர்க்கு 'விழிவரை முகப்பு'க் காட்டிய அம் 'முதல் விழியாளர்' அல்லது 'நுதல் விழியாளர்’ ஆதிபகவன் சிறப்பிக்கப்பட்டார். தமிழர் வழிவந்த பல கிளையினங்களிலும் இவ் ஆதிபகவனே சிவன், அறிவன், கண்ணன், புத்தன், சினன் என்று பலவாறாக அழைக்கப்பட்டான்.
பகுத்துக் காண்பது பகல். இது பழந்தமிழில் நாளைப் பகுத்துக் காட்டும் நண்பகலின் பெயராய், பின்பொழுது பகுத்துக்காட்டும் கதிரவன் பெயராகவும், கதிரவனொளியார்ந்த நாளின் பகுதியாகவும் வழங்கிற்று.