1. சுழற்சியில் புரட்சி
உலகம் சுற்றுகிறது!
நாம் வாழும் நிலவுலகம் சுற்றுகிறது! ஆனால் இதை நாம் பொதுவாக உணர்வதில்லை. அத்துடன் நாம் நினைப்பது போல, அது தட்டையானதன்று உருண்டையானது. இதுவும் பொதுவில் நமக்குப் புலப்படாத செய்தியே.
இந்த இரண்டு உண்மைகளையும் மனித இனம் எளிதில் கண்டு கொள்ளவில்லை. கண்டுணர நீண்டநாள் பிடித்தது.
இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சங்ககாலச் சான்றோர்களும், பண்டைக் கிரேக்க நாட்டின் தலைசிறந்த அறிஞர் சிலரும் இவற்றை உணர்ந்திருந்ததாக அறிகிறோம். ஆயினும் யாவருமொப்ப இயல் நூலறிஞர் இவற்றை நிலைநாட்டியது சென்ற நான்கு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே தான்.பரந்த அளவில் உலக மக்கள் இவற்றை உணர்ந்து வருவதும் இந்நாட்களிலேயேயாகும்.
இவ்வுண்மைகளில் முழு ஆழ அகல விரிவுகளை இன்று கூட மனித னம் முற்றிலும் அறிந்துவிடவில்லை - அறியத் தொடங்கியேயுள்ளது என்னலாம். ஏனெனில் துண்டுபட்ட தனி உண்மைகளல்ல. மனித உலகின் எல்லா அறிவுத் துறைகளிலும் சென்று பரவி, மனிதன் அறிந்த அறிவையெல்லாம் புரட்சிகரமாக மாற்றி வருபவை, இன்றும் மாற்றவல்லவை இவை.
பழைய நம்பிக்கைகள் பல இவற்றால் சரிந்துள்ளன - சரிந்து வருகின்றன. அதுமட்டுமன்று. பழைய அறிவே ஆராய்ந்து முடிவு கட்டியவை போலத் தோன்றிய அடிப்படை அறிவுக் கூறுகளே, கோட்பாடுகளே இவற்றால் முற்றிலும் உருமாறியுள்ளன, பண்பு மாறியுள்ளன. புதிய அறிவியலூழியின் கருத்துக்களைக்கூட இவை பொங்கழற் குவையிலிட்டுப் புத்தம் புதிய அறிவுக்கு,