பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




=

வாழ்க!

1. வாழ்த்து மரபு

எவ்வளவு இனிமையான சொல்!

இனிமைத் தமிழிலேகூட இதனிலும் இனிமை வாய்ந்த சொல் வேறு கிடையாது எனலாம். சொல்லினிமை, ஓசை யினிமை; பொருளினிமை, பண்பினி மை ஆகிய பலவகை இனிமைகளின் இனிய கூட்டுறவு அது!

தமிழ், யாழ், எழில், அழகு, பொழில், பழம்! அழகிய சுவை யார்ந்த இந்தச் சொற்களிலெல்லாம் இடம் பெறும் பண்பார்ந்த 'ழகர' ஒலி இச்சொல்லுக்கு இழுமெனும் இன்னோசை தருகிறது. தவிர, மற்ற மெய் ஒலிகளும் உயிர் ஒலிகளும் அத்தமிழ்ச் சிறப்பொலியுடன் இணைந்து தாமும் இன்னோசை பெற்று அதன் இனிமை பெருக்குகின்றன.

வல்லோசையுடைய ககரமும், குறுகிய ஓசையுடைய அகரமும் இச் சொல் லிறுதியில் தமக்கு இயல்பான வன்மை, குறுமை திரிந்து, புத்திசையுடன் பொலிவது காணலாம்.

சொல்லின் இனிமையுடனும், ஓசையினிமையுடனும் போட்டி யிடுகிறது பொருளினிமை. பொருளினிமையுடன் போட்டியிடுகிறது பொருட்பண்பினிமை, மரபினிமை!

சொல்லின் பொருள் நயங்கள், ஒட்ப திட்ப நுட்பங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை; ஆழ்ந்து ஆராய்ந்துணரத் தக்கவை.

இச்சொல் தமிழர் பண்பாட்டில் ஊறி, தமிழ் மரபில் வளர்ந்து, தமிழகத்தின் வருங்கால வளர்ச்சிக்குரிய பல பண்புக் கூறுகளுக்குத் தோற்றுவாய் ஆகத்தக்கது. புத்துலகின் புது வாழ்வுக்கே வழி வகுக்கத்தக்கது.