பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் – 18

இருவகை வாழ்த்தொலிகளும் ஆண்டாண்டாக, தலைமுறை கடந்து தலைமுறையாக, ஊழிதோறூழியாக எழுந்து வளர்வன. அவை தமிழ் ஒலிவடிவாக, தமிழ் நிலத்திலிருந்து, தமிழக வானில் பரவுகின்றன. தமிழ்த் தென்றலுடன் தென்றலாகக் கலந்து, தமிழ் மணத்துடன் மணமாக இயைந்து, தமிழர் வாழ்வென்னும் அகல் வெளியில் பரவி உலவுகின்றன; உலவிவருகின்றன.

தமிழ்க்குருதி ஓடும் நரம்புகளிலெல்லாம் அவை புத்தார்வத் துடிப்பையும் புத்துயிர் அலைகளையும் புத்துணர்ச்சிப் பெருக்கையும் தூண்டிவருகின்றன. தூண்டிப் புதிய தமிழகத்தை ஆக்கிவருகின்றன.

'பொங்கலோ பொங்கல்! வாழ்க தமிழ்ப் பொங்கல்! பாற்

பொங்கலோ பொங்கல்!'

நிலா முற்றந்தோறும் நிலவொளி பூத்த மாதரசியர், இன் குதலை மதலையரும் மைந்தரும் நங்கையரும் புடைசூழ நின்று, கதிரொளியை வரவேற்று மகிழ்கின்றனர்.மகிழ்ந்து, பொங்கலோ, பொங்கல்!' என ஆர்ப்பரிக்கின்றனர். கையில் கரும்பு ஏந்திய கன்னியரும் காளையரும் பொங்கும் மகிழ்வுடன் பொங்கல் உண்ண விரைகின்றனர்.

குடும்ப விழாவும் இன விழாவும்

மணவிழாவின் வாழ்வு பொங்கலில் பொங்குகிறது. மலரும் மணமும் இழைந்து இன் நறுங்கனிவளம் தந்துள்ளன. முன்னர்க் காதல் துணைவர்க்கே விழாக் கொண்டாடப்பட்டது.இப்போது காதல் துணைவரே விழாக் கொண்டாடுகின்றனர் - மைந்தர் மதலையருடன் கொண்டாடுகின்றனர்! குடும்பம் முழுவதுமே கொண்டாடுகிறது-சுற்றஞ்சூழ, நண்பர், தோழர், தோழியர் குழாம் சூழக் கொண்டாடுகிறது!

தமிழும் தமிழரும் தமிழ்ப் பண்பும் வளருந்தோறும், தமிழர் குடிவிழாவாகத் தொடங்கிய இத் தமிழ்விழா தமிழர் குடியாட்சி விழாவாக, தமிழர் சமுதாய விழாவாக, இன விழாவாக விரிவுற்று மலர்கின்றது!

மண விழாவின் வாழ்த்து, பொங்கல் வாழ்த்தாக வளர்ந்துள்ளது!