பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

7

உண்கலப் பொங்கலுடன், நன்கல நிறைநாழியின் செந் நெலும், பிற கூல வகைகளும் துளங்குகின்றன. செங்கரும்பும், மங்கல மஞ்சளும், மணந்தரும் இஞ்சியும் ஏலமும் கமழ்கின்றன. சுவை பெருக்கும் பாலும் தேனும், கனியும் கண்டும் பயில்கின்றன. நாளின் களிப்பும், வாழ்வின் மகிழ்வும் எக்களிப்பும் கிளர்ந் தோங்குகின்றன.

‘பொங்கலோ பொங்கல்! வாழ்க தமிழ்! பொங்குக தமிழர் வாழ்வு' என்று தமிழ்ப்புலவர், தமிழ் மாணவ மாணவியர், தமிழார்வ நம்பியர் நங்கையர் வாழ்த்தெடுக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!

பழைமையில் புதுமை புகுந்து ஒலியாடுகின்றது. புதுமையில் பழைமை பரவி நிழலாடுகின்றது. பழைமைப் பாசமும் புதுமை நேசமும் விரவிப் பல்வண்ண இளநிலா, இளவெயிலின் இன்கதிர் எரிக்கின்றன. புதுமையின் ஆர்வம் பழைமையின் பண்பில் விளையாடி முதிர்ந்து கனிவுறுகின்றது. பாலும் தேனும், நெய்யும் பழமும், கண்டும் குழைந்தாற்போல, தமிழும் இன்பமும், தமிழறிவும், தமிழ்க் கலையும், தமிழ்ப்பண்பும், மறுமலர்ச்சியும் தழுவி அளவளாவுகின்றன.

உள்ளறையிலிருந்து வெளியறைக்கு வந்தால், 'பொங்கிற்றா பால்?' என்ற வினா வணக்கம்! வெளியறையிலிருந்து முற்றத்துக்கு வந்தால், ‘பால் பொங்கிற்றா, பொங்குக பால்' என்ற வாழ்த்து! முற்றம் கடந்தால், தெருவில் அடிதோறும் திருப்பந்தோறும், ‘பொங்குக பால், பொங்குக வாழ்வு' என்னும் பொங்கல் மகிழ்வுரைகள்!

தமிழக அஞ்சல் துறை பொங்கல் வாரம் முழுவதும் பொங்கல் வாழ்த்துகளைச் சுமந்து செல்கிறது! பொங்கல் பரிசுகளைச் சுமந்து சுமந்து மீள்கின்றது!

பண்டை உலகின் பழம் புகழ் ஏந்தி, வருங்கால உலகின் வண்புகழ் வளர்க்கக் கால எல்லைநோக்கிக் கடுகிச் செல்லும் ஓர் ‘அஞ்சல் மொழிதான்' தமிழ்! “வாழ்க தமிழ் அஞ்சல்! வளர்க அஞ்சல் தமிழ்!”