(260
அப்பாத்துரையம் – 18
வான வெளியில் விண்மீன்களை மட்டுமன்றி, சில ஒளிக்கீற்றுக்களை, ஒளி ஆவிப்படலங்களை, ஒளி முகில்களையும் நாம் காண்கிறோம். ஆற்றல் மிக்க தொலை நோக்காடிகளின் மூலம் ஆராய்ந்தால்கூட, இவை சற்றே ஒளிமிக்க படலங்களாக மட்டும்தான் தோன்றுகின்றன. இவை உண்மையில் கண்ணுக்கு எட்டாத, ஆற்றல் சான்ற தொலை நோக்காடிகளுக்குக் கூட எட்டாத நெடுந்தொலைவுக்கும் அப்பாற்பட்ட நெடுநீள் தொலைவுடையவை. ஆயினும் இவை கோடி, நூறுகோடிக் கணக்காகத் திரண்டுள்ள விண்மீன் குழுக் களின் திரளொளியே என்று வானூலார் உய்த்துணர்கின்றனர்.
இவை நம் ஞாயிற்று மண்டலத்தைப் போன்ற கதிரவன் மண்டலங்கள் மட்டுமல்ல, ஏனெனில் ஒவ்வொரு விண்மீனுமே ஒரு கதிரவன் மண்டலம் ஆகும். பல ஞாயிற்று மண்டலங்களை உட்கொண்ட அண்டமாக, பல அண்டங்களை உட்கொண்ட பேரண்டமாகத் திகழ்பவை அவை என்று கூறப்படுகிறது.
ஒளிப்படலங்களில் கட்புலனுக்கே மிகமிகப் பெரிதாகத் தோற்றுவது வான்கங்கை அல்லது பால் வழி (Milky Way) என்று கூறப்படுவதாகும். இது இரவு நேரங்களில் வானின் தென்கோடி முதல் வடகோடிவரை சற்றுத் தென்மேற்கு வடகிழக்குச் சாய்வாக, ஆங்காங்கே சற்று இடை விட்டுவிட்டு ஒரு பெரிய நிலா வில்லாகக் காட்சியளிக்கிறது.
ஒவ்வோர் ஒளிமுகிலும் பல கதிரவன் மண்டலங்களைத் தனி விண்மீனாகக்கொண்ட பன்னூறாயிரம் விண் மீன்களின் திரளே. அத்தகைய கதிரவன் மண்டலங்கள் பலவற்றை அண்ட மாகவும், அவ் அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டமாகவும் அவை திகழ்கின்றன. அண்டங்கள் அல்லது பேரண்டங்களின் இத் தொகுதிகளுள் நமக்கு மிகவும் அருகாமையிலுள்ளது உண்மையில் நம் பேரண்டம், நம் அண்டமாக, நம் ஞாயிற்று மண்டலத்தைத் தன்னகம் அடக்கியுள்ளதே வான்கங்கை அல்லது பால் வழி என்று அறிஞர் கருதுகின்றனர்.
மற்ற அண்ட பேரண்ட ஒளி முகில்களை விட அது பெரிதாகவும் ஒளிமிக்கதாகவும் அணிமையுடையதாகவும் தோன்றுவதன் காரணம் இதுவே-நாம் அதனுள்ளிருந்து அதன் ஒரு பகுதியாக இருந்தே அதைக் காண்கிறோம்.