உலகம் சுற்றுகிறது
267
நிலவுலகிலிருந்து நெடுந்தொலைவில், அதன் சுழற்சியில் மிகுதி பங்கு கொள்ளாதவை கதிரவன், விண்மீன்கள் ஆகியவை. திசை மட்டும் மாற்றி நிலவுலகின் சுழற்சி வேகத்தை மாறாமல் காட்டுபவை இவையே. இவற்றுள் கதிரவன் மட்டுமே ஒளியும் உருவும் மிக்கதாகத் தோற்றுவது இத்தளத்தில் இது மிக அணிமையிலி ருப்பதனாலேயே ஆகும். ஆனால் விண்மீன்கள் ஒளியும் உருவும் பெரிதும் மறைவுற்று, சிறுசுடர் மணிகளாக விட்டுவிட்டு ஒளி வீசுகின்றன. திசை மட்டும் மாற்றி நிலவுலகின் சுழற்சியை இவை அப்படியே காட்டுகின்றன.
விண்மீன்களில் மிகு தொலைவானவை படிப்படியாக நிலவுலகின் சுழற்சி மாயத்தினால் பாதிக்கப்படாதவையாகி, இறுதியில் சில பல அதிலிருந்து முற்றிலும் விடுபட்டனவாய், நிலவுலகம் எவ்வாறு சுழன்ற போதும் தொலைவும் திசையும் ஒளியும் மாறாதவையாய் இருக்கின்றன. இவை நிலவர விண்மீன்கள் (Fixed Stars) எனப்படுகின்றன.
நிலவுலகை மையமாகக் கொண்ட பழைய வான நூலார் கணித்த கோளங்களின் இயக்கங்கள், கதிரவனே மையம் என்று அறியப்பட்ட பின்னும், காலக் கணிப்பு, வேகக் கணிப்பு ஆகியவற்றில் மாறுபடாததன் காரணம் இதுவே. அறியாமை யலையின் உள்ளீடான அறிவலையாக இக்கணிப்பு இயல்கின்றது
என்னலாம்.
கோள்கள், விண்மீன்கள், நிலவர விண்மீன்கள் என்ற இந்தப் பாகுபாடு வானநூல் வளர்ச்சியில் ஒரு முக்கிய கூறு, முக்கியமான படி ஆகும். முதலிரண்டின் வேறுபாடு அவற்றின் இயல்பறிந்த வேறுபாடாகத் தொடங்கவில்லை. கோள்கள் நிலையான ஒளி வீசுபவை, விண்மீன்கள் மின்னி மினுங்குபவை என்ற காட்சி மாய அடிப்படையிலேயே அவை பிரித்துணரப் பட்டன ஆகலாம். விண்மீனைக் குறிக்கும் மீன் என்ற சொல்லும் (மின்னுவது மீன்), விண்மீனுக்குச் சரியான மேலை மொழிச் சொல்லும் (Star, Stir - அசை) இதனைச் சுட்டிக்காட்டுகின்றன. விண்மீன்கள், நிலவர விண்மீன்கள் ஆகியவையும் இது போலத் தோற்ற மாயத்தினடிப் படையிலேயே பிரித்துணரப் பட்டிருந்தன என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நிலவர விண்மீன்கள் தோற்ற மாயத்திலும் திசை மாறாதன.