பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

||- -

அப்பாத்துரையம் – 18

மாண்புறத் திகழ்ந்த, முத்தமிழ், முச்சங்கப் புகழை அவன் வானளாவ உயர்த்தி, அதனை மற்ற இரு தமிழ் மன்னர்களும், அவர்கள் வழிநின்று, கீழ்த்திசை யுலகமும் வணங்கும்படி செய்கிறான்.

இன்றும் நாகரிக ஒளி புகாத மேலை உலகின் முகிலுருக் கள்கூட முத்தமிழ் ஒளிநாடி முடியசைக்கின்றன.

புத்த நெறியை உலகளாவப் பரப்பிய பேரரசர்களான அசோகனும், கனகனும் (கனிஷ்கனும்) ஒருபுறமும், சமண நெறி பரப்பிய கலிங்கப் பேரரசன் காரவேலன் மற்றொரு புறமுமாக நின்று, முத்தமிழ் வேந்தனுக்கு முத்தொளி பரப்பும் வெண்கவரி வீசுகின்றனர். வானுயர் முத்தமிழ்க் கொற்றக் குடையைப் புத்தர்பிரானே தாங்குகின்றார். சிலுவை ஏந்திய செம்மலும், ஏட்டுருத் தாங்கிய ஏந்தலும் மேற்றிசையிலிருந்து அன்பு மலர்களும் அறிவு மணிகளும் தூவி வாழ்த்துகின்றனர்.

புத்தர் பிரான் அருகில் புத்த துறவியர் குழாம், மாவீரன் அருகில் அழகிய ஒரு சமண அறிஞர் குழாம் நின்று, முத்தமிழ் ஏத்தும் ஒரு புதுத் தமிழாக நான்காம் புகழ்த் தமிழ் மாலை புனைகின்றனர். அவர்கள் கைகள் ஒரு பால் கன்னட கூர்ச்சர நாடுகளையும், ஈழத்தையும்; ஒருபால் கடாரச் சாவக நாடுகளையும் சீனத்தையும்; மற்றொருபால் சோனக, யவன நாடுகளையும் சுட்டிக் காட்டுகின்றன. ஆம். வள்ளுவர் அன்பறத்தின் கிளைகளாக, புத்தர்பிரான் அருள் நெறியையும் மாவீரர் அறிவு நெறியையும் முத்திசையிலும் கொண்டு சென்று பரப்பிய தமிழகத்தை அவர்கள் ஏத்துகின்றனர்; ஏத்தி அகமார வாழ்த்துகின்றனர்.

அசோகனிடம் செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தையும்; நெடுஞ்செழியன் மணிமேகலையையும்; கரிகாலன் திருக்குறளையும் உவந்தளிக்கின்றனர். தமிழ் மூவேந்தரின் தூதுவனாக அப் பரிசுகளை உலகுக்களிக்கும்படி கோரி மகிழ்கின்றனர். அசோகனிடமிருந்து புத்தர் பிரான் மூன்று திருநூல்களையும் வாங்கி, மூன்று பிடகங்களுக்கும் முன்னே, அறப்பெரும் பீடிகையுடனொத்த கலைப் பெரும் பீடிகையின் கண்ணே, அவற்றை ஏற்றிவைத்துப் பூசனை செய்கின்றார். புத்த துறவியர் குழாம் பாடுகின்றது.