பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

15

தோங்குமளவும், அவர் பேசிய தமிழ்மொழி நிலவுமளவும், அவர் நாடி நரம்புகளில் ஓடிய தமிழ்க் குருதி தமிழர் நாடி நரம்புகளில் ஓடும் அளவும் அப்பண்புகள் சாகா வரம் பெற்ற பண்புகளாய்த் தழைக்கும் எனலாம்!

தமிழன் வாழ்வு தாழ்வு வளங்கள் வெற்றிலைக் கொடி வளர்த்த ஒரு கோமான் கதையை நமக்கு நினைவூட்டுவன ஆகும்.

வெற்றிலைக் கொடிவளர்த்து வீறுடன் வாழ்ந்தான் ஒரு கோமான். இயற்கைத் திறமறிந்து வேளாண்மை செய்தவன் அவன். அதன் பயனாக, பண்ணை கிட்டத்தட்ட இயற்கை வளர்ச்சியே போலக் காட்சியளித்தது. கோமான் மரபினர் அது இயற்கை வளர்ச்சியென்றே கருதினர். அதன் பண்பறியாது அதைப் புறக்கணித்தனர். அப்போதும் அதன் வளம் குறைய வில்லை. பண்ணை கெடவும் இல்லை. பேணுவார் இல்லாமலே அது பீடுற வளர்ந்தது. காடாக வளர்ந்தது. பண்ணையும் பண்ணைவேலியும் கடந்து அஃது அயல் புலங்களெங்கும் படர்ந்தது. இதுவும் இயற்கை நிகழ்ச்சியே என்று கோமான் குடியினர் வாளா இருந்தனர்.

அயல் புலத்தவர் தம் முயற்சி யெதுவுமில்லாமலே பெரு வளங் கண்டனர்-அவர்கள் சின்னஞ் சிறு முயற்சிகள்கூட அவ்வளம் பெருக்கின. பண்ணைச் செல்வம் படிப்படியாகக் குறைய, அயலவர் செல்வம் படிப்படியாக உயர்வுற்றது.கோமான் வழி வந்த இளங்கோக்கள் இது கண்டு வாளா பொருமினர்.

கொடி தமதெனக் கோமான் மரபினர் உணரவில்லை. ஆனால், கொடி தமதன்றென அயலவர் அறிந்தனர். கோமான் குடியினரின் அறியாமையைப் பயன்படுத்தி, கொடியின் மூட்டிலேயே சென்று, புதுக் கொடிக்குரிய இளந்தைகளை உருவாக்கி வந்தனர். இதனால் புதுக்கொடிகள் பரப்பினர், புதுவளம் கண்டனர்.

காலும் தலையும் அறியாமல், தம் செயல் பிறர் செயல் காணாமல்,கோமான் குடியினர் முன்னிலும் பொருமினர். வீணே மடமையுடன் மனம் புழுங்கி, மாழ்கினர்.