உலகம் சுற்றுகிறது
319
விட, ஒற்றைத்தடி மரங்கள், செடிகொடிகள் பொதுவாகமுற்பட்ட படியுடையவை.
உயிர்கள் ஒரே மொத்தமாக ஒரு கடவுளால் படைக்கப் பட்டன, அல்லது தோன்றின என்ற கருத்து இடைக்காலத்தது. மனித இனம் சென்ற சில நூறாயிர ஆண்டுகளுக்குள்ளும், உயிரினங்கள் ஒரு சில கோடிக்கணக்கான ஆண்டுகளுக் குள்ளுமே தோன்றிப் படிப்படியாக வளர்ந்தன என்பது பல இயல்நூல் துறைகளின் ஒன்றுபட்ட ஆராய்ச்சி முடிவு.
உயிரினங்களின் இப் படிமுறை வளர்ச்சியே இன மலர்ச்சி (Evolution) என்று கூறப்படுகிறது.
உயிர்கள் தோன்றுவதற்குப் பலகோடி ஆண்டுகட்கு முன்னிருந்தே நிலவுலகம் நிலவியுள்ளது. ஆனால் அது உட்பகுதி மட்டுமன்றி, புறத்தோடும் எரிகுழம்பாய் இருந்தது. நிலவுலகச் சுழற்சியால் அது ஆறி அமரவும், அதன் மீது படிந்த நீராவி கடலாகப் படியவும், பிற ஆவிகள் வளிமண்டலமாகச் சுழலவும், ஓயா வெயில் பனி மழைகளால் ஆறியபாறைகள் பொடிபட்டு மண் உண்டாகவும் பலகோடி ஆண்டுகள் பிடித்தது. உயிர்கள் அதன் பின்னரே ஏற்பட முடிந்தது.
உயிர் நூலார் விரிவுற ஆய்ந்துள்ள இதே உயிர் மலர்ச்சியைத் தொல் பழங்காலத் தமிழர் ஐம்பூத மலர்ச்சி யாகவும் ஐம்புல மலர்ச்சியாகவும் கொண்டனர்.
‘கல்தோன்றி மண் தோன்றாக் காலம்' என்ற சங்க இலக்கியத் தொடர் ஐம்பூத மலர்ச்சியில் கடைசிப்படியையும், இயல் நூலார் விளக்கும் உயிர்த்தோற்றத்துக்கு முந்திய படியையும் சுட்டிக் காட்டுகிறது.
ஒவ்வொரு புலனுணர்ச்சியையும் உயிர் மலர்ச்சியில் ஒரு படியாகக் காட்டுகிறார் தொல்காப்பியர்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே, இரண்டறி வதுவே அதனுடன் நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே,