பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(322

அப்பாத்துரையம் - 18

அலை வேறு, இனவாழ்வின் தலைமுறை வாழ்வு அலைவேறு எனப் பிரிவுறுகின்றது; தனி உயிர் வாழ்வு அதன் பிறந்த மண் தொடங்கி இறப்புடன் முடிகிறது. ஆனால் அது அடுத்த தலைமுறை உயிரை உண்டு பண்ணும் பருவம் இவற்றுக்கு இடைப்பட்ட உயிர் மலர்ச்சிப் பருவம் ஆகும். இந்த உயிர் மலர்ச்சியிலிருந்து அடுத்த உயிரின் மலர்ச்சிப் பருவம் வரை ஒரு தலைமுறை ஆகிறது.

உயிர் மலர்ச்சி என்பது தனி உயிர் வாழ்வில் இன மலர்ச்சியின் அலை தொடங்கும் பருவமேயாகும். தனி உயிர் வாழ்வில் அதற்கு முன்னுள்ள பருவம் முதிராப் பயிற்சிப் பருவ மாகவும் பின்னுள்ள பருவம் புத்துயிர் பேணும் பருவமாகவும் மட்டுமே கழிகின்றன. தனி உயிருடன் தொடர்பில்லாமலே, அதன்மீது மலர்ச்சிப் பருவத்திலிருந்து மலர்ச்சிப் பருவத்துக்குத் தாவி இன வாழ்வு தவழ்கின்றது.

தனி உயிர் இனமலர்ச்சியில் ஈடுபடும் இப்படியிலேயே, இனவாழ்வில் முட்டையிடுதல் என்னும் புதுமை நிகழ்கின்றது. தனி உயிர் வாழ்வில் முட்டைப்பருவம் என்பது உண்மையில், முட்டையிடும் உயிர்கள் முட்டை யிடுமுன் அடைந்த வளர்ச்சிப் படியின் ஒரு செறிவேயாகும். முதல் ஊழி உயிர்கள் பலகோடி ஆண்டுகளில் அடைந்த முன்னேற்ற மனைத்தையும் புதிய முட்டை ஊழி உயிர்கள் முட்டையின் வாழ்வுக் காலத்துக்குள் விரைந்து செறிவுறப்பெற்று, புதிய ஊழியின் புத்தின வாழ்வில் முனைகின்றன.

முட்டையிடும் உயிர்களிலிருந்து கருவுயிர்க்கும் உச்ச உயர் உயிரினங்களுக்கு வரும்போது, நாம் இதுபோல இன்னொரு ஊழியில் புகுகிறோம். முதல் இரண்டு உயிரின ஊழிகளில் உயிரினமடைந்த முன்னேற்ற முழுவதையும் இவ்வூழி உயிர்க் கருவிலேயே விரைந்து செறிவுறப் பெற்று, பிறந்தவுடன் மூன்றாம் ஊழியில் புகுந்து முன்னேறுகிறது.

மனித இனம் உச்ச உயிரினங்கள் தாண்டி நெடுந் தொலை முன்னேறிவிட்டது. இம்முன்னேற்றம் மற்ற ஊழிகளில் அடைந்தது போன்ற புற உடல் முன்னேற்றமல்ல. அக உறுப்பு முன்னேற்றமும், அதனுடன் இசைந்த வாழ்க்கைக் கருவி கலங்கள், வாய்ப்பு வன்மைகள், கருவியமைப்புகளின் மேம்பாடு ஆகும்.