பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் – 18

உலகில் முதல் முதல் குடி வாழ்வும் உழவும் தொழிலும் கலையும் கல்வியும் கண்ட இனம் தமிழினமேயாகும். தமிழர் வாழ்க்கைப் பண்பின் இந்த மரபு நடுநிலக் கடலக நாடுகளில் பரந்து, மனித நாகரிகம் வளர்க்க உதவியதை இச்சொல் மரபு காட்டுகிறது. ஏனெனில், கிரேக்க இலத்தீன மொழிகள், ஆங்கில சமற்கிருத மொழிகளைப் போலவே ஆரிய இனமொழிகள்தாம். ஆனால், ஆரிய இனத்தவர் கிரேக்க உரோம நாடுகளுக்கு வருவதற்கு முன் இருந்த நடுநிலக்கடல் நாகரிக இனங்களிட மிருந்தே இத்தமிழ்ப் பண்பை அவர்கள் பெற்றிருந்தனர்.

இந்திய மாநில எல்லையில் மூவாயிர ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்திய ஆரியரும் தமிழினத்துடன் தொடர்புற்றுப் படிப்படியாகப் பண்படைந்தனராயினும், தமிழின மரபு வட இந்தியாவில் பேரளவில் அழிந்த பின்னரே இந்திய ஆரிய நாகரிகம் புதிதாகத் தோற்றிற்று. இதனாலேயே அஃது இப் பண்பைப் பல கூறுகளில் பெற முடியாது போயிற்று என்று அறிகிறோம்.

உயிர் என்றால் என்ன?

ப்

உயிர்ப்பண்பு, உயிர்ப்பொருள், மூச்சு என்ற மூன்று கருத்துக்களுக்கும் பொதுவான சொல்லாக இன்று உயிர் வழங்குகிறது. உயிர்ப் பண்பைத் தனிப்படக் குறிக்கவும், உயிர்ப்பொருளைத் தனிப்படக் குறிக்கவும் இன்று வழக்கிலுள்ள தனித்தமிழில் வேறு சொல் இல்லாத இடர்ப்பாடு பெரிது. தனித் தமிழை நையாண்டி செய்ய இன்னும் விரும்புபவர்க்கு இஃது ஒரு தக்க வாய்ப்பும் அளிக்கிறது எனலாம்.

உயிர்ப்பண்பை ஆவி என்றும் குறிப்பதுண்டு.உயிர்ப் பொருளைப் பண்டைத் தமிழிலும் இன்றைய கன்னடத்திலும், 'மா' என்ற சொல் குறிக்கும். அதன் பன்மையான மாக்கள் என்பதே உயிரினத்தைக் குறிக்கத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் வழங்கிய சொல் ஆகும். இன்னும் பழைமையாக, உயிர்மெய் என்ற சொல் உயிர்ஒலி, மெய்ஒலிக் கூட்டுறவை மட்டுமன்றி, உயிரும் உடலும் கூடிய உயிர்ப்பொருளையும் குறிக்க வழங்கியிருந்ததென்று அறிகிறோம். ஆனால், உரையாசிரியர்கள் குறிப்பன்றி, இதற்கு வேறு சுவடு இல்லை.