பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

||__

அப்பாத்துரையம் – 18

குறிப்பு. 'மாள்வதே' இன்னும் சீரிய பண்புடைய சொல். ஏனெனில், மாண்பின் பகுதியும் அதுவே.வாழ்வில் புகழ் பெற்று, தன் வாழ்வு கடந்து புகழுற்றான், மரபு வாழ்வில் பெருக்க மடைந்தான் என்பதே அதன் நிறை குறிப்பு.

வாழ்வு என்பதன் மெய்ப்பொருள் சாவு கடந்து பெருகுவதே. சாவு அதாவது வளர்ச்சியின் ஓய்வு கடந்து நிலவுதல் அதாவது சாவாமைப் பண்பே தமிழர் கண்ட வாழ்க்கையின் குறிக்கோள். சாவா மருந்து என்று தமிழர் புனைந்துரைத்தது இதையே. இங்ஙனம் சாவு கடந்து நீடித்து வாழ்வு பெறுவது உயிர்மரபு மட்டுமல்ல; மனித இனமரபு மட்டுமல்ல; சென்ற தலைமுறைகள், நடைமுறைத் தலைமுறை ஆகியவற்றின் வாழ்க்கைப் பண்புகளும், வருங்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்குரிய வித்தாகத் தனி மனிதன் தன் வாழ்க்கையில் திரட்டி அளித்த உயிர்ப் பண்புகளும் அச்சாவு அல்லது வாழ்வு நிறைவு கடந்து பொங்கி வழிகின்றன.

உயிரின் இப்பொங்கற் பண்பையே தமிழர், சிறப்பாகத் தமிழ்த் திருவள்ளுவர், எச்சம், இசை, புகழ் என்று குறிப்பிட்டார்.

உயிர் என்ற சொல் திருவள்ளுவர் கண்ட இப்பண்பைத் திருவள்ளுவர்க்கு முன்பே கண்டு குறித்துள்ளது! வள்ளுவரைக் கடந்த வண்டமிழ்ப் பண்பு இஃது என்னலாம்! வாழ்தல் என்ற சொல்லும் திருவள்ளுவர் கருத்துப்படி என்றும் நின்று நிலவுதல், சீர்சிறப்பும் புகழும்பட மரபில் இயங்குதல் என்ற பொருள்கள் தந்தன.

ஆசி மொழியும் வாழ்த்துரையும்

ஆசி மொழியும் வாழ்த்துரையும் முற்றிலும் ஒன்று என்று பலர் கருதி வருகின்றனர். நல்லெண்ணமுடைய உரைகள் என்ற அடிப்படை இரண்டுக்கும் பொதுப்பண்பேயாகும். ஆயினும், வாழ்த்தின் வகைகளுள் ஒன்றாக, ஆசி மொழி அடங்கும். ஆசி மொழியை இக்காரணத்தால் வாழ்த்து என்று கூறலாமானாலும், வாழ்த்தை ஆசிமொழி என்று கூற முடியாது. அதன் பண்பு வேறு. அதன் பொருளும் மரபும் ஆசியைவிட அகல விரிவுடையது.