பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

சான்றோர் சால்பும் வெகுளியும்

அப்பாத்துரையம் – 18

வள்ளுவர் மரபில் நின்ற தமிழர் கடவுளையே வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாகக் கொண்டனர். அத்தன்மை மிக்க பெரியோர் பண்பும் இதுவே. தமக்கென வாழாத அப் பிறர்க்குரிமையாளர் தம் என்பையும் பிறர்க்கு உரிமைப் படுத்துபவர். அத்தகையோர் என்றும் சினங் கொள்பவர் அல்லர், கொண்டாலும் அஃது உணர்ச்சி வசப்பட்ட சினமாகவோ, தன்னலம் குறித்த சினமாகவோ இராது. அறிவார்ந்த, உலகநலங் குறித்த சினமாக மட்டுமே இருக்கும். எனவேதான், அவர்கள் சீறின், அச்சீற்றம் ஊழின் சீற்றமாக, இயற்கையின் சீற்றமாக, இயற்கையின் சீற்றம் கொண்ட உருவாக அமையும்.

அறவோர் நெறி நின்ற பாவலர் வசைப்பாட்டும் தமிழில் அறம் பாடுதல் என்றே குறிக்கப்பட்டது. கவிஞர் வசைப் பாட்டுக்குத் தமிழ் மன்னர் அஞ்சினர் என்பதையும் அவர்கள் வாழ்த்தையே மிக உயர் செல்வமாகக் கருதினர் என்பதையும் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. செங்கண்மாவின் தலைவன் நன்னன் புலவர் பழிக்காளாகி அழிவுற்றான். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்கேகும் போது தன் சூளுரையில் 'போர் வெற்றி கொள்ளேனானால், புலவர் என்னைப் பாடா தொழிக' என்கின்றான்!

ஆசிமொழி என்பதற்கிணையான சமற்கிருதச் சொல் (ஆசீர்வாதம்) வாழ்த்து என்ற சொல்லின் பண்பிலிருந்து மட்டுமன்றி, ஆசிமொழி என்ற தொடரின் பண்பிலிருந்தும் பெரிதும் திரிபுற்றே நிலவுகின்றது. 'ஆசி' என்ற சொல் வழியாகவே அதுவும் பிறந்ததாயினும், அது தெய்வீக, இயற்கை மீறிய ஆற்றலுடைய சொல் என்ற தவறான பொருளை எப்படியோ மேற்கொண்டது. 'நிறைமொழி மாந்தர் பழிமொழி'யும் இதுபோல, சினங்கொள்ளா அருட் பண்பாளர் கண்டன உரை என்ற சீரிய பொருளிலிருந்து இயற்கை மீறிய ஆற்றலுடையார் கடுஞ்சினம் என்ற கருத்தாக இழிவுற்றது.

இயற்கையை இயக்கும் சீரொழுங்குபட்ட ஆற்றல் என்ற உயர் கருத்திலிருந்து, இயற்கை மீறிய ஆற்றல் உடையவர் என்ற நிலைக்குக் கடவுள் கருத்துப் புராணங்களில் இழிந்துவிட்டது காண்கிறோம்.