பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் – 18

என்ற கடவுள் வாழ்த்தில், வீழ்க, ஆழ்க, சூழ்க என்ற சொற்களும் 'வாழ்க' என்ற பொருளே தருவது காண்க. தீமை வீழ்தல் நன்மை வளர்தலுக்குரிய ஒரு துணைவளமேயாகும். மழைத்துளி வீழ்தல், கடவுள் புகழ் சூழ்தல் நல்வாழ்வுக்கு உதவும் செய்திகள் என்று கூறத் தேவை இல்லை!

வாழ்த்து ஆசிமொழியைப்போல ஒருதிசைப் பண்பன்று. வாழ்த்துபவரிட மிருந்து வாழ்த்துப் பெறுபவரிடம் செல்வது மட்டுமன்று.வாழ்த்துபவரிடமிருந்து வாழ்த்துப் பெறுபவரிடம் சென்று, மறுதிசையில் வாழ்த்துப் பெறுபவரிடமிருந்து வாழ்த்துபவரிடம் மீளும் ஓர் அலை எதிர்அலைப்பண்பு அது. அது பரப்பும் நல்லெண்ண, நல்மொழி, நற்செயலார்வ அலைகள் வாழ்த்துபவரிடமிருந்து வாழ்த்துப் பெறுபவரை நோக்கியும், வாழ்த்துப் பெறுபவரிடமிருந்து வாழ்த்துபவரை நோக்கியும் செல்வதுடன் அமைவதில்லை. அவர்களைக் கடந்து, இவர்கள் இருவர்க்கும் தாயகமான சமுதாய இன எல்லை முழுதும் அளாவி நிரப்பி, அவ்வெல்லை கடந்து பொங்கி வழிந்து, மனித இனம் முழுவதும், உயிரினம் முழுவதும், இயற்கை எல்லைவரை சென்று பரவுவதாகும்.

மனித இன எல்லை கடந்து மேலே சென்று 'வாழ்க வானவர்' என்றும், கீழே சென்று 'வாழ்க ஆனினம்' என்றும், இயற்கையளாவி 'வீழ்க தண்புனல்' என்றும் தெய்வப் பாசுரங்கள் வாழ்த்தியதன் நோக்கு இதுவே.

தவிர, அமைதி வாய்ந்த நீரில் எழும் சிற்றலைகள் அவை தோன்றிய மய்ய இடத்திலிருந்து புதுப்புது அலைகள் எழுப்புவதையும், அவையும் படர்ந்து கொண்டேயிருப்பதையும் காணலாம். ஆனால், அவை நம் பார்வையாற்றல் எல்லை கடந்தும் பரவிக்கொண்டேதான் இருக்கின்றன என்பதை இயங்கியல் நூலார் அண்மைக் காலத்தில் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். உண்மையில் பரப்பில் செல்லும் அலைகளே யன்றி, பரப்பிலிருந்து ஆழ் தடநோக்கிச் சென்று பரவும் நுண்கிளை அலைகளும் ஓயாது இயங்கிக்கொண்டே தான் இருக்கின்றன. இதுபோலவே வாழ்த்தும்போது இயக்கப்படும் நல்லலைகள் சமுதாயம் எங்கும் பரவுவதுடன் அமையாது, சமுதாய வாழ்வில் என்றும் இயங்கிக்கொண்டே இருப்பவை