பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

33

ஆகும். தலைமுறை கடந்து தலைமுறை, ஊழி கடந்து ஊழி புத்தலைகளை, முன்னிலும் நுண்ணிய பண்பலைகளை அவை எழுப்பிக் கொண்டே இருப்பன. இட, கால எல்லை கடந்த கடவுள்பண்பாக இவ்வலை இயக்கம் நின்று இனத்தில் இயங்குகின்றது. அதுவே இனவாழ்வின் உயிராகி, இனத்தை இயக்கி வளர்க்கும் ஆற்றலுடையதாகிறது.

வாழ்க்கைக் குழு

வாழ்தல் என்ற சொல்லுக்கு இரண்டு பிறவினை வடிவங்கள் உண்டு. ஒன்று வாழ்வித்தல், மற்றொன்று வாழ்த்துதல். மேலீடாகப் பார்த்தால்கூட, இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு, பண்பு வேறுபாடு, மரபு வேறுபாடு உண்டு என்பது தெளிவாகத் தெரியவரும்.

வாழ்வித்தல் என்பது வாழும்படி செய்தல், வாழ்வதைத் தூண்டுதல் அல்லது வாழத் துணைசெய்யும் செயலைச் செய்தல் என்று பொருள்படும். இச்சொல் செயலெல்லையில் நிற்பது. ஒரு தனிச் செயலின் குறுகிய இட எல்லையிலும் கால எல்லையிலுமே இது வழங்குவது. ஆனால், வாழ்த்தல் அல்லது வாழ்த்துதல் விருப்பம், அவா, ஆர்வம், நோக்கம் ஆகியவற்றையும் சார்ந்தது. இவை வாழ்த்துபவன் செயலெல்லை, சொல்லெல்லை, கருத்தெல்லை ஆகிய மூன்றையும் தாண்டியது. ஏனெனில், இவை புற உள்ளமாகிய அறிவு கடந்து, இடை உள்ளமாகிய உணர்ச்சி கடந்து, அக உள்ளமாகிய உணர்வு சார்ந்தவை. உணர்ச்சி, அறிவு, சொல், செயல் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கே உள்நின்று இயக்குபவை இவை.

வாழ்த்துதல் வாழ்த்துபவன் அவாவாக, ஆர்வமாக, அவன் வாழ்க்கைக்கே உரிய உள்நோக்கமாக, விருப்பமாக எழுகின்றது. அஃது அவன் வாழ்வினூடாக நின்று நிலவி, வாழ்த்துபவர் வாழ்வுடன் வாழ்த்துக்குரியவர் வாழ்வை இணைத்து, இருவர் வாழ்விலும் படர்கிறது. இருவர் வாழ்வுக்கும் நிலைக்களமான வாழ்க்கைக் குழு அல்லது சமுதாயம், இனம் ஆகியவற்றிலும் அது பரவி, அவ்விருவர் வாழ்வின் உள்நின்று உயிராகவும், புறம்நின்று ஆழமாக வும் ஒருங்கே செயலாற்றுகின்றது.