பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் – 18

களாகிய இவ்விரு பேராற்றல்களையும் தனி மனிதன்நலம், சமுதாயநலம், இனநலம் ஆகிய திசைகளில் திருப்பிச் செலுத்திப் பயனுடைய நல்லாற்றல்களாக்குவது பண்பேயாகும்.

ஆற்றல்மிக்க உறுப்புகளாகிய கையும் காலும், தசை நாரும் நரம்பு நாடிகளும், குருதி ஓட்டமும், அவற்றின் செயல்களுக்குத் திசையும் நெறியும் அறிந்து ஆணையிடும் கண்ணும் மூளையும் இல்லாத வழி பயன்படமாட்டா. காட்டுவெள்ளம் இருகரை வழிப்பட்டாலன்றி நாட்டில் பசுங்கழனியும் பூங்காவும் வளர்த்துப் பொங்கல் வளம் உண்டுபண்ண மாட்டாது. மின்னாற்றல் மின்தடை களினூடாகச் செலுத்தப்பட்டாலன்றி குறித்த இடத்தில் சென்று குறித்த முறையில் செயலாற்ற முடியாது.

வை போலவே ஆற்றல்மிக்க உணர்ச்சி, ஆற்றல் பரப்பிப் பெருக்கும் உணர்வு ஆகிய இரண்டையும் வாழ்வாக்கி வளப்படுத்தும் முறையில், அறிவுப் பண்பு வாழ்க்கையின் கண்ணாகவும், கரையாகவும், ஊடுதடைப் பொருள்களாகவும், உயிராகவும் நின்று செயலாற்றுகின்றது.

உணர்ச்சியும் ஆர்வமும் இல்லாத அறிவு ஆற்றலற்றது; செயலற்றது. ஆனால், அறிவின் துணையற்ற உணர்ச்சியும் ஆர்வமும் உயிரற்றவை. உணர்ச்சியும் ஆர்வமும் அறிவும் கூடிய இடத்தில், அறிவு வழி வகுக்க, உணர்ச்சியும் ஆர்வமும் ஆற்றல் பெருக்க, இவற்றின் ஒத்துழைப்புப் பயனையும் இன்பத்தையும் ஆற்றலையும் ஒருங்கே வளர்க்கும்.

வாழ்த்துபவர் நல்லெண்ண ஆர்வத்துடன் கூடிய அறிவுப் பண்பு, வாழ்த்துபவர், வாழ்த்துக்குரியவர் ஆகிய இருவரையும் வாழ்வுக் குழுவையும், இயக்கிக் கூட்டுச்செயல் பெருக்கு வதாயமையும்.

உணர்ச்சி, அறிவு, பண்பு

இன்பம் நாடுவது துன்பம் தவிர்ப்பது-இந்த இரண்டும் மனிதனுக்கு மட்டுமன்று, உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான இயல்பு ஆகும். எல்லாப் பொருள்களையும் கீழ்நோக்கி, நிலவுலக மய்யம் நோக்கி இழுக்கும் ஈர்ப்பாற்றலே போல, உயிர்களனைத்தையும் இயக்கும் அடிப்படை உயிராற்றல் இதுவே. இதையே நாம் உணர்ச்சிக் கூறு என்று அழைக்கிறோம்.