பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

37

தற்காலிக இன்பம் நிலையான துன்பம் தரலாம். தற்காலிகத் துன்பம் நிலையான இன்பத்துக்கு வழி வகுக்கலாம். இதனை உணர்ந்த மனிதன் இன்பத்தில் சிலவற்றைத் தீயன என விலக்கி, நல்லன எனச் சிலவற்றைக் கொள்கிறான். அதுபோலவே துன்பத்தில் சிலவற்றை நல்லன எனக்கொண்டு, தீயன எனப் பிறவற்றையே தவிர்க்க விரும்புகிறான். இன்பம், துன்பம் என்ற கீழ் விலங்கியல் பாகுபாட்டைவிட்டு, இன்ப துன்பங்களுட் சிலவற்றை நன்மை எனக் கொண்டும், மீந்த சில இன்ப துன்பங்களைத் தீமையென விலக்கியும் ஒழுக விரும்பும் உளப்பகுதியே அறிவுக்கூறு ஆகும்.

தனி மனிதன் அறிவுக்கூறு தற்காலிக இன்ப துன்பம் கடந்து, நிலையான இன்பம் நாடுகிறது. அதுபோலவே பொது அறிவுக்கூறு, சமுதாய இன அறிவுக் கூறுகள், தனி மனிதன் இன்பதுன்பம், ஒரு தலைமுறை இன்ப துன்பம் கடந்து, சமுதாய இன்பம், இன இன்பம் நாடுகின்றன.

ஒரு தனி மனிதன் இன்பம் மற்றொரு தனி மனிதற்குத் துன்பமாக அமையலாம். ஒரு தனி மனிதன் துன்பம் மற்றொருவற்கு இன்பமாகத் தோன்ற லாம். இதுபோலவே தனி மனிதன் இன்ப துன்பம், பொது சமுதாயத்துக்குத் துன்ப இன்பமாகவும்; ஒரு தலைமுறையின் இன்பதுன்பம், தலைமுறை கடந்த இனத்தின் துன்ப இன்பமாகவும் மாறுபடக்கூடும். இவற்றைச் சமுதாயமும் இனமும் எப்போதும் உணர்வதில்லை. னெனில், சமுதாயத்திலும் இனத்திலும் வாழும் மக்கள் தம் தனிக் கண்ணோட்டத்துடனேயே சமுதாயத்தையும் இனத்தையும் காண்கின்றனர். சமுதாயக் கண்ணோட்டமுடைய சமுதாய அறிஞரும், இனக்கண்ணோட்டமுடைய இனஅறிஞரும் சமுதாய இன்பதுன்ப அடிப்படையிலும் தனி மனிதன் இன்ப துன்பங்களை நல்லன, தீயன என வகுக்கின்றனர்.

சமுதாய அறிஞர் வகுக்கும் நன்மை தீமைப் பாகுபாடே அரசியல் நீதி அல்லது பொருள். இன அறிஞர் வகுக்கும் நன்மை தீமைப் பாகுபாடே ஒழுக்கம் அல்லது அறம். இவை இரண்டும் சமுதாயஞ் சார்ந்த, இனஞ்சார்ந்த பொது அறிவின்பாற் பட்டவை ஆகும்.