பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் – 18

உலகின் அரசியல், சமுதாய ஒழுங்குமுறை நூல்கள், சட்டங்கள் ஆகியயாவும் சமுதாய அறிஞர் வகுத்தவையே. அறநூல்கள் அல்லது ஒழுக்க நூல்களோ இன அறிஞரால் வகுக்கப்பட்டவை. இருவகை அறிஞர்களின் தொலைநோக்குக் கேற்ப அவர்கள் சட்டம், சமுதாயம், ஒழுக்கம், அறம் ஆகியவற்றின் உயர்வு தாழ்வுகள் அமைகின்றன.

உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டுக்கும் மேற்பட்ட கூறு பண்புக்கூறு. கலைக்கூறு. சமுதாய அறிஞரும் இன அறிஞரும் இன்பதுன்பப் பாகுபாடுகளை நன்மை தீமைப் பாகுபாடுகளாகப் புதிய அடிப்படையில் வகுப்பது போல, பண்பாளர்கள், கலைஞர்கள் ஆகியவர்கள் நன்மை தீமைப் பாகுபாட்டை அதனினுமுயரிய ஒரு பாகுபாட்டின் மீது புதிதாக வகுத்தமைக் கின்றனர்.அவையே அழகுடையன, அழகற்றன என்ற பாகுபாடும்; உயர்வுடையன, இழிந்தன என்ற பாகுபாடும் ஆகும். இவற்றை வகுப்பவர் கலைஞர், பண்பாளர் ஆகியோர். அவர்களை இனங்கடந்த கடவுள் பண்புடைய அறிஞர் என்னலாம்.

இனங்கடந்த கடவுள் பண்புக்கூறே உணர்வுக் கூறு

உணர்ச்சி, உணர்வு ஆகிய இரண்டும் தொடர்புடைய சொற்கள். ஆனால், முன்னது அறிவு செயலாற்றாத இயற்கைப் பண்பு. பின்னது அறிவு கடந்த, முழு நிறை அறிவுடன் உணர்ச்சி இணைந்த உச்ச உயர்பண்பு ஆகும்.

திருவள்ளுவர் வகுத்த அறம், பொருள், இன்பம் மூன்றுமே இந்த உணர்வு நிலையில் வகுக்கப்பட்டவை ஆகும். உணர்வு நிலைப் பண்பை இன்னும் சென்று எட்டாத இன்றைய உலகில் அது கால இடம் கடந்த பொதுமறையாய் அமைந்துள்ளது இதனாலேயே என்று காணலாம்.