பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




=

3. வள்ளுவர் கண்ட அருளறம்

வாழ்க்கை பற்றிச் சிந்தித்தவர், சிந்திப்பவர் மிகச் சிலர்; சிந்தியாதவரே மிக மிகப் பலர்!

சிந்தித்தவர், சிந்திப்பவருள்ளும் தம் வாழ்க்கை பற்றிச் சிந்தித்தவர், சிந்திப்பவர்தாம் மிகப்பெரும்பான்மையினர். ஆனால், இவர்களைச் சிந்திப்பவர் பட்டியலில் சேர்ப்பதற்கில்லை. ஏனெனில், தனி வாழ்வு என்பது வாழ்வேயன்று. மனித இனத்தில், விலங்கினங்களில், கீழ்த்தர உயிரினங்களில்கூட, தனி உயிர் வாழ்வு என்பது இனவாழ்வில் ஓர் இழை; குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு என்ற கூட்டு வாழ்வுத் தளங்களில் ஒரு கண்ணி.இம்மூன்று தளங்கள் சாராத நிலை உயிர் வாழ்வன்று, உயிரிலாப் பொருளின் நிலையே, உயிரற்ற நிலையே!

இன வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு இவற்றைப் பற்றிச் சிந்தித்த மிகச் சிலரே, சிந்திக்கும் மிகச் சிலரே, மனித நாகரிகத்தை ஆக்கியவர்கள்! மனிதனை ஆக்கியவர்கள்! ஏனெனில், இச்சிந்தனை மனிதனிடம் மட்டுமன்று. விலங்கு களிடையேகூட உண்டு.

சூல்கொண்ட தன் பிடியுடன் சேற்றில் படிந்த சிறிய அளவான நீரைக் குடிக்கச் சென்றது, ஒரு களிறு! பகிர்ந்து குடிக்கப் போதாதஅளவு நீர்! பகிராமல் குடிக்கவோ பிடி விரும்பாது! அதன் தமிழ்ப்பண்பு அவ்வளவு! களிறு வள்ளுவர் பண்பை மேற்கொண்டது! குடிப்பதாக நடித்தது! பிடி நீரை அருந்திவிடாய் தீர்ந்தது!

இது சங்க இலக்கியம், கலித்தொகை தரும் ஒரு காட்சி!

யானைக் கூட்டத்தில் முதிய யானைகள் முன்னே செல்ல, பருவ இளங்களிறுகள் பின்னே போக, பிடிகள், குட்டிகள் இடையே அணிவகுத்துச் செல்லும் என்று அறிகிறோம்.