பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அருளுலகின் மூல முதல் ஒளி

அப்பாத்துரையம் - 18

உலக அருட் பெரியார்களுக்கு வழிகாட்டிய முதல்வர் எனப்படுவோர் இயேசுபிரான், முகமது நபிகள் நாயகம், புத்தர் பெருமான், மகாவீரர், வள்ளுவர் பெருமான் ஆகியோர்! நம் காலத்திலும் உலகப் பெரியார் டால்ஸ்டாயும், காந்தியடிகளும் அவ்வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்கள். இவர்கள் அருள்மரபைப் பற்றி ஜெருமன் அறிஞர் ஆல்பிரட் ஷ்வைட்சர் புதுமையான ஒரு கருத்துரை தந்துள்ளார். அஃது இந்தியாவின் சமயச் சிந்தனை' (Religious thought of India) என்ற அவர் நூலில் கண்டது. உலக அருட்பெரியார்களுக்கு இந்திய அருட் பெரியோரே வழிகாட்டிகள் என்பதும், இந்திய அருட் பெரியார் களுக்கு வள்ளுவரே வழிகாட்டி என்பதும் அவர் விளக்கம் ஆகும்.

அவர் கூற்றுப் புனைந்துரையன்று, மெய்யுரையே என்பதை இந்திய அருளாளரின் இனங் கடந்த இனப் பண்பு காட்டுகிறது.

‘கொல்லாதே’, ‘அன்பு செய்' ஆகிய நீதிகள் மோசே காலமுதல் இயேசு பெருமான், நபிகள் நாயகம் ஆகியோர் காலம்வரை வலியுறுத்தப்பட்டே வந்தன.அவ்வருட்பெரியார்கள் அவற்றை மனித இனமளாவப் பரப்பவும் தவறவில்லை.

இந்திய அருட்பெரியார்கள் அனைவருமே அதை மனித இனங் கடந்து உயிரினமளாவப் பரப்பி வலியுறுத்தியுள்ளார்கள். 'உயிர்களைக் கொல்லாதே, உயிரினங்கள் எல்லாவற்றையும் நேசி' என்று அதை விரிவுபடுத்தியுள்ளார்கள். புத்தர் பெருமானும் அவரைக் கடந்து மகாவீரரும் இன்றைய உலகம் மலைக்கும் அளவுக்கு அதனைத் தம் சமயக் கோட்பாடாக்கியிருந்தனர் என்பது உலக மறிந்ததே. அதனால், மனித நாகரிகத்துக்கு ஏற்பட்ட முன்னேற்ற நலங்களும் சிறிதல்ல; பிணியாளர்களுக்குரிய மருந்தகங்கள் நிறுவுவதிலும், உயிரினங்களின் துணையகங்கள் வகுப்பதிலும் உலகுக்குப் புத்த சமணரே வழிகாட்டிகளா யிருந்தனர் என்பது வரலாறு கண்ட செய்தி ஆகும்.

தமிழகத்துக்கு வெளியேயுள்ள புத்த சமணர்களைக் காட்டிலும், தமிழகப் புத்த சமணர் நூல்கள் கொல்லாமையையும் ஊறு செய்யாமையையும் வலியுறுத்தியுள்ளன. உண்மையில் நாலடியாரளவு இக்கொள்கையை வலியுறுத்திய சமண நூலை