பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் – 18

‘அறம் அதாவது ஒழுக்கத்தின் அடிப்படை கொல்லாமையே. ஏனெனில், கொல்லுதலே அறத்துக்கு மாறான எல்லாத் தீய பண்புகளுக்கும் வேர் முதல் ஆகும் என்று அவர் விளக்குகிறார்.

வள்ளுவர் கண்ட பொதுவுடைமை

கொல்லாமை புத்த சமணரிடம் ஓர் எதிர்மறைப் பண்பு. வள்ளுவர்க்கு அஃது ஓர் எதிர்மறைப் பண்பாய் நின்றுவிட வில்லை. அன்பு காரணமாகவே அது பிறக்கிறது; ஒத்துணர்வால் அஃது ஊறு செய்யாமையாக வளர்கிறது.

‘தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ, மன்னுயிர்க்கு இன்னா செயல்’

'நமக்குத் துன்பம் வந்தால், அது நமக்கு எவ்வளவு தாங்குதற் கரியதாய் இருக்கிறது? இதை உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்குத் தீமை செய்யலாமா?' என்று அவர் கேட்கிறார்.

துன்ப உணர்வு அருளுணர்வானபின், அத்துன்பம் பிற உயிர்களுக்கு வருவது கண்டால், விலக்கவும் விரைதல் வேண்டும். இது சால்பு.

'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கட் செயல்'

‘துன்பம் என்று தான் அறிந்தவை, பிறரிடம் ஏற்படாமல் செயல் ஆற்றுதல் வேண்டும்'

இது மட்டுமோ?

பிறர் துன்பத்தைத் தான் பகிர்ந்து உதவுவதுபோல, தன் இன்பத்தை, தன் 'வாழ்வின் முதலை'ப் பிறருடன் பகிர்ந்து பிற உயிர்களையும் வளர்த்தல் வேண்டும்.

'பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை!’

பகுத்து என்ற சொல் தமிழில் பாத்து என்றும் பகுத்தீடு, பாத்தீடு என்றும் திரியும். பாதுகாத்தல் என்ற வினையின் முதல் உறுப்பாகிய ‘பாது' இந்தப் பாத்து என்பதன் மரூஉவே.