பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் – 18

அமையுமுன் அவற்றிடையே நட்பு,பகைமை ஆகிய பண்புகளும் ஏற்படவில்லை. இவற்றுக்கு அடிப்படையான விருப்பு வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளும் தோன்றவில்லை. ஒவ்வோர் உயிரும் மற்றெல்லா உயிர்க்கும் ஏதிலாப் புத்துயிராகவே வாழ்ந்தன.

உயிர்க்கு உயிர் ஏற்பட்ட முதல் தொடர்பு உணவுத் தொடர்பே.

(செடி கொடி நீங்கலாக ஏனைய) உயிர்கள் உண்ணும் உணவு எப்போதும் இன்னோர் உயிராகவே இருந்து வருகிறது. ஏனெனில், ஊனுணவு மறுத்த சிறுபான்மை மனிதர்கள் உண்ணும் உணவும், செடி கொடி வகை உணவன்றி வேறன்று. அவையும் உயிருணவேயாகும். ஆயினும், உணவின் அடிப்படை ஆக்கம் உயிரிலா இயற்கைப்பொருள் என்பதில் ஐயமில்லை. செடி கொடிகள் பெரும்பாலும் இயற்கையை நம்பியே வாழ்கின்றன. நீர், நிலம் இரண்டிலும் கலந்துள்ள உப்புகள்; காற்றுவெளி, வான வெளியில் பரவும் காற்றுவளிகள், கதிரொளி ஆகியவையே அவற்றின் உணவு. ஆனால், மற்ற உயிரினங்கள் யாவும் ஒன்று செடி கொடிகளையோ அல்லது பிற உயிரினங்களையோதான் உணவாகக் கொள்கின்றன.

செடி கொடிகள்கூட மற்றச் செடிகொடி உயிரினங்களின் பகுதிகள் மக்கிச்செறிவுற்ற உரத்தால் முன்னிலும் வளம்பட வளர்கின்றன. பிற செடி கொடி உண்ணும் ஒட்டுயிர்ச் செடியினமும், உயிரினங்களின் தசையையே உண்ணும் செடியினமும்கூட உண்டு.

உயிர்களின் முதல் தொடர்பு தின்னும் தொடர்பே -ஓர் உயிர் தின்கிறது. இன்னோர் உயிர் தின்னப்படுகிறது. கொலையில் இருந்தே உயிர் தொடங்கிற்று என்பதை இது காட்டுகிறது. வாழ்வில் இன்னும் கொலைப்பண்பு இருப்பதன் மறை திறவு இதுவே. உயிர்கள் உணவுக்காக ஒன்றை ஒன்று தின்னப் போராடின. பெரிய உயிர் சின்ன உயிரைத் தின்றது. வலிமை மிக்க உயிர் வலிமை குறைந்த உயிரைத் தின்றது. இளந்தாய் பச்சிளங் குழந்தையைத் தின்றது! இளமுறுக்குடைய பிள்ளை தாய் தந்தையைத் தின்றது!