பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

73

அணிமையுறவையும் காணலாம். அதனுடன் போட்டியிட்ட பண்டைப் பெருவிலங்குகள் அரக்கப் பல்லி, அரக்க முதலை, அரக்கத் திமிங்கலம் முதலியன. அவை இன்று புராணக் கதைகளில்கூடக் குறிக்கப்படாதவை, மனிதன் கற்பனையில்கூட வந்தெட்டாதவை. மண்ணூலார் ஆராய்ச்சிகளாலேயே அவை உலகின் முதலூழி உயிர்கள் என்பது தெரியவருகின்றன.

மனிதனையும் பிறவிலங்குகளையும் விடப் பழைமைவாய்ந்த ஓர் உயிரினப் பெருங்குழுவின் இன்றைய பிரதிநிதியாக யானை விளங்குகிறது. முதல் மனித இனங்கள் பலவற்றின் பேராளாக, மனித இனத்தின் வளத்துக்கு ஒரு சான்றாக விளங்கும் தமிழினம் போல, அஃது உயிர் முதலூழி உயிரினங்களின் வளத்துக்கு ஒரு சான்றாக நிலவுகின்றது. ஆனால், தமிழன் வளம்போல, அதன் வளமும், நீடித்த வாழ்க்கைப் பண்பு, நீடித்த மரபு வாழ்வு ஆகியவற்றை விளக்கும் மரபாகவும் இயங்குகிறது.

உயிர்ப் போராட்டத்தின் வெற்றி உடல் வலு, அறிவு வலு, சூழ்ச்சி வலு முதலிய எந்த அழிவு வலுவிலும் இல்லை. நீடித்த வாழ்வும் இவற்றைப் பொறுத்ததல்ல. குடும்ப வாழ்விலிருந்து பெறப்படும் அன்புப் பண்பும் சமூக வாழ்விலிருந்து விளையும் கூட்டுறவு, ஒப்புரவுப் பண்பும் இரண்டிலுமிருந்து வளம்பெறும் கூட்டு வாழ்வின் விழையார்வமும் இன்பமுமே வாழ்வில் வளமும் பொங்கலும் உண்டு பண் ணு கின்றன. உயிரினங்களுள் யானையின் வாழ்வும் மனித இன வாழ்வும், மனித இனத்தில் தமிழின வாழ்வும் ஒருங்கே தரும் படிப்பினைகள் இவை!

ஆதிக்க வாதம் வாழ்க்கையை ஒரு போராட்டமாகக் கருதிற்று. வெற்றி வீறும் வீம்பும் ஆதிக்கமும் நாடிற்று. உடற் பெருமையும் உடல் வலுவுமே வெற்றிக்குரிய வழி என்று கருதிற்று. அதற்கெதிரான அடிமை மனப்பான்மையோ தன்னல அறிவு அல்லது சூழ்ச்சி, வஞ்சகம், பொய்ம்மை ஆகியவற்றின் மூலம் வெற்றி நாடிற்று. தவிர ஒவ்வோர் உயிரும் மனிதனும் மற்ற ஒவ்வோர் உயிர் அல்லது மனிதனையும் உள்ளூரப் பகைக்கும் பண்பையும் இவ்விரண்டும் வளர்த்தன. ஓயாப் போட்டி, பொறாமை, ‘வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்’ என்ற அழுகை வேதாந்தம் ஆகியவையும் இந்த அடிமை மனப்பான்மையின் நீடித்த மரபுக்குரிய விளைவுகளேயாகும்.