பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க

77

உயிரினங்களுக்குப் புறம்பாக, அழகு, வண்ணம், குரலினிமை ஆகியவற்றையும், அதற்கேற்ற மென்மை நயத்தையும் பெண் பாலினிடமே காண்கிறோம்.

முதல் முதல் அறிவுப் பண்பும் கலைப்பண்பும் வளர்த்த உயிரினப் பகுதி பெண்பாலினமே என்பதை இது காட்டுகிறது. உடல் பருமை, உடல்வலு, வீரம் ஆகியவற்றைவிட, சிறுநயம், மென்நயம், மென்சாயல், அழகு, வண்ணம், சிறுகுரல், ஒலிநயம் ஆகியவையே வெற்றிக்கு உதவவல்லவை என்பதும்; ஆணின் வெற்றி தோல்விகளைத் தன் விருப்பத் தேர்வுக்கும் விருப்ப மிகுதிக்கும் தக்கபடி தன் விளையாட்டு வெற்றி தோல்விகளாகப் பயன்படுத்தலாம் என்பதும்; தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வேண்டும்போது இயல்பாக வெளித் தோற்றுவித்தும் வேண்டாத போது மறைத்தும் ஆணைத் தன் விருப்பின்வழி இயக்கலாம் என்பதும் ஆணினம் தாண்டிப் பெண்ணினமே முதல் முதல் பெற்ற அறிவு. அதுவே மனித இனத்தின் முதல் அறிவு; முதல் கலைப் படிப்பினைகள்.

பெண்ணினம் பெற்ற அறிவு கலைப் படிப்பினைகளே, ஒரு பேருண்மையைக் காட்டவல்லன. பெண்டிர் மனித இனத்தை உடலளவில் ஈன்று வளர்த்த இனம் மட்டுமன்று; உயிரினம் பெற்ற முதல் அறிவுப் பண்பு, கலைப்பண்பு பெண்ணினம் ஈன்றளித்த ஒன்றே. மனித இனத்தை மனிதப் பண்புடைய இனமாகப் படைத்தளித்த இனமும் பெண்ணினமேயாகும்.

பெண்ணின் காதல் போராட்டத்தின் மறைதிறவறிந்த ஆடவன் தன் உயிர்ப் போராட்ட வீரப் பண்பை மாற்றி, அன்புப் போராட்டப் பண்பின் முதற் படிப்பினையைப் பெற்றான். காதல் கூந்தல் ஊடலில் தன்தோல்வியால் தானும் வெற்றியின்பம் பெருக்கி எதிரிக்கும் வெற்றியின்பம் ஊட்டுதல் ஆகிய பண்புகளை அவன் கற்றான். அவன் படிப்படியாக விலங்குநிலை மாறி மனிதனாயினான்!

பண்பறியாத, தகாத்தனமாக நடக்கும் ஆடவனை இன்றும் பெண்டிர் ‘அட மிருகமே!' என்பதையும், புரியாத்தனமாகச் செயலாற்றும் பெண்டிரை 'இஃது என்ன பேயடா அப்பா!' என்பதையும் காண்கிறோம். ஆண் கெட்டால் விலங்காவான், பெண் கெட்டால் விலங்காகமாட்டாள், பேய்தான் ஆவாள்!