பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் – 18

தமிழர் உணவுயிர்ப் போராட்ட வாழ்வைப் புறம் என்றும், காதற்போராட்ட வாழ்வை அகம் என்றும் வகுத்தனர்.புறத்தினும் அகமே தமிழ்ப் பண்பின் சிறப்பென்றும், அவ்வகவாழ்விலும், கூடலினும் ஊடலே தமிழ்ப்பண்பின் தனித் திறம் என்றும் கருதினர். தமிழறிந்தும் தமிழர் பண்பறியாத ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அப்பண்பறிவுறுத்தவே கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடினார் என்னும் செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

பெண்மையும் அறிவு, கலைப்பண்புகளும்

அறிவுத்திறத்திலும் கலைத் திறத்திலும் முதல் முதல் முன்னேறிய இனப்பகுதி பெண்மையே. அவற்றில் உயிரினத்தையும் மனித இனத்தையும் தூண்டி வந்துள்ள, தூண்டிவரும் பகுதியும் பெண்மையே. ஆயினும், இந்த இரண்டு துறைகளிலுமே பெண்பாலார் முற்றிலும் பிற்பட்டே இருக்கின்றனர்; இருந்து வருகின்றனர்.

முற்றிலும் பிற்பட்டிருக்கின்றனர் என்று கூறுவதுகூடச் செய்தியை மழுப்பி நயம்படக் கூறுவதேயாகும். அறிஞர் அழகுநய மரபுக்கேற்ப உரைக்கும் சொல்லணி நயமேயாகும். கிட்டத்தட்ட அவர்கள் நிலை இரு துறைகளிலும் ஒன்றிரண்டு அழகுச் சிலைகளின் நிலைதான் என்னலாம். அதுவும் மிக முன்னேறிய நாடுகளில், இனங்களில், வகுப்புகளில்!

இது மட்டுமோ? பெண் உணர்ச்சிக்குரியவள்; ஆண் அறிவுக்குரியவன் என்ற எண்ணம், கருத்து, எல்லா மக்களிடமும், அறிஞரிடமும் கலைஞரிடமும் இன்றுகூட உலகில் பரவியுள்ளது. பெண் விடுதலை, சரிசமநிலை, பேசும் முற்போக்கு அறிஞர், கலைஞர் பெர்னார்டுஷா, இப்சன், வெல்ஸ் உட்பட பெண் அறிஞர், கலைஞர்கூட உலகெங்கும் இவ்வாறே கருதியுள்ளனர்; கருதி வருகின்றனர்.

இவ்வாறு கருதாத அறிஞர் பண்டை உலகில் ஒருவர்தாம், அவர் திருவள்ளுவர் ! இன்றைய உலகிலும் ஒருவர்தான், அவர் திரு. வி. கலியாண சுந்தரனார்! பன்மொழி உலகில் இருவருமே ஒருமொழியாளர், தமிழர், தமிழ் நாட்டவர்! உலகிலுள்ள மற்ற எல்லா அறிஞர், கலைஞர் கருத்தும் இதுபற்றிக் கனவுகூடக் காணவில்லை.