பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

81

உலக வரலாற்றிலும் நாகரிக வரலாற்றிலும் குடியரசுகளில் பல வகைகள், பல வளர்ச்சிப் படிகள் உண்டு. சிறப்பாக, குடியரசுக் காலத்துக்கு முற்பட்ட அரசர் நிலையும், குடியரசுகளை அழித்து மேம்பட்ட முடியரசர் நிலையும் ஒரு தன்மை யுடையன அல்ல.

அரசருள் மிகத் தொடக்கக் கால அரசர், தம் குடும்பம், தம்முடைய குருதித் தொடர்புடைய குலம் (Tribe) ஆகியவற்றின் மீது இயற்கை ஆட்சி செலுத்தியவர்களே. இவர்களை வரலாற்று அறிஞர் குலபதிகள் என்பர். இந்தியாவில் ஆரியர் வந்த சமயம் இந்தக் குலபதிகளேயன்றி வேறு ஒருவகை அரசரும் ஏற்பட்டனர். இவர்களே குடியரசுகளைத் தம் கைக்கீழ் அடக்கி ஆண்டவர்கள். அந் நாளைய குடியரசுகள் பெரிதும் வாணிக நகரங்களா யிருந்ததனால், இவ் வரசர் வணிகர் தலைவர் (விசாம்பதி) என வழங்கப்பட்டனர்.

நகராண்மைக் கழக மரபின் வரலாறு

இன்றைய உலகின் நகரவைகள், மாநகரவைகள் உண்மையில் உரிமை வரையறுக்கப்பட்ட சிறு குடியரசுகளே.12- 14ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலும் ஹாலந்திலும் வெனிசு முதலிய இத்தாலிய நகரங்களிலும் கீழை நாடுகளிலுமே இத்தகைய வாணிகக் குடியரசுகள் இருந்தன என்று அறிகிறோம். 12ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை ஸ்விட்ஸர்லாந்து மேலையுலகின் மிகப் பழைமையான மிகப் புகழ்பெற்ற கூட்டுக் குடியாட்சியாக நிலவி வருவதும் காண்கிறோம்.

இந்தியாவில் தற்கால மேலையுலகக் குடியரசுகளை மட்டுமன்றிப் பண்டைய உரோம கிரேக்கக் குடியரசுகளையும் விடப் பழைமையான காலத்திலிருந்தே வணிகக் குடியரசுகளும் கூட்டுக் குடியரசுகளும் நிலவின என்று கண்டோம். உண்மையில் ஆரியர் வரும் சமயத்திலும் அதற்கு முன்பும் திராவிடர் குடியாட்சி நகரங்களிலும் கூட்டுக் குடியரசு நாடுகளிலுமே ஆட்சி செலுத்தினர் என்று அறிகிறோம். மெகஸ்தனிஸ் குறிக்கும் மௌரியர் கால நகராட்சி முறை மொகஞ்சதாரோ காலத்தி லிருந்து ஆரியர் படையெடுப்புக் கடந்தும் நீடித்து வந்த முறையேயாகும்.