பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அப்பாத்துரையம் - 19

தமிழகத்தில் ஐம்பெருங் குழுக்களையும் எண்பேராய முறைகளையும் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஆந்திரரின் மரபினரான பண்டைக் குறும்பர்களின் கல்வெட்டுகளால் இம் முறை அவர்களிடையே நிலவியதாக அறிகிறோம். இன்று சோடா நாகபுரியிலுள்ள கோண்டர்கள் முதலிய பண்டைத் திராவிடர் எனப்படுவோரிடையே இம் முறைகள் ஆரிய நாகரிகத்தால் கெடாதும் மாறாதும் நின்று நிலவுவதாக ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர். பஞ்சாயத்து என்ற தற்கால சமற்கிருதத் தொடர் உண்மையில் ஐம்பெருங் குழுவிலுள்ள ஐந்து (பஞ்ச) என்ற சொல்லையும் எண்பேராயம் என்பதிலுள்ள ஆயம் (ஆயத்) என்ற சொல்லையும் இணைத்த புதுத் தொடரேயாகும்.

தமிழ்ச் சங்க கால நிலை

மேலீடாகப் பார்ப்பவர்களுக்கு, மேலையுலக வரலாற்றிலும் வட இந்தியாவிலும் காணும் அளவுகூடக் குடியரசுகள் பற்றிய குறிப்புத் தமிழிலக்கியத்தில் தென்படவில்லை என்றே தோன்றும். அது மட்டுமன்று. சங்க இலக்கியங்களிலும் அவற்றிலும் எவ்வளவோ பழைமை வாய்ந்த தொல்காப்பியத்திலும்கூட முடியுடைத் தமிழரசர் மூவருமே படைப்புக் கால முதல் தொன்று தொட்ட பழைமையுடையவர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பண்டைத் தமிழர் குடியரசுகளையே அறிந்திருக்க முடியாது என்று யாராவது கூறினால், அதில் வியப்படைவதற் கில்லை. உண்மையில் பொது மக்களேயன்றிப் புலவரும் அறிஞரும் வரலாற்று ஆராய்ச்சி யறிஞரும்கூட அவ்வாறு கூறி வந்துள்ளனர்; எழுதி வந்துள்ளனர்; அவ்வாறே கருதியும் வந்துள்ளனர்-வருகின்றனர். பரந்து வலியுறவு பெற்றுவிட்ட இந்த ஆராயா நம்பிக்கையை வருங்கால ஆராய்ச்சியாளரின் ஒன்றுபட்ட உழைப்பின்றி வேறெதுவுமே அகற்ற முடியாது.

சங்க காலத்திலே முடியரசர் மூவர் மட்டுமே இருந்தனர். ஆனால், மூவரசர்களுக்கு உட்பட்டும் உட்படாமலும் எண்ணற்ற குடியரசர்கள் இருந்தனர். தமிழக எல்லைக்குள் இவர்கள் வேளிர் என்றும் அதற்கப்பால் வடுக நாடு என்று அன்று அழைக்கப்பட்ட தெலுங்கு கன்னடப் பரப்புகளில் சளுக்கர் என்றும் குறும்பர் என்றும் அழைக்கப்பட்டனர். மலையாள கன்னடக் கரைக்