பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ஐம்பெருங்குழு எண்பேராயம்

அப்பாத்துரையம் - 19

ஐம்பெருங்குழு என்பது தற்கால அமைச்சரவை போன்றது. எண்பேராயம் என்பது மன்னர் தனிமன்றம் போன்றது. முன்னதில் அமைச்சர், குருக்கள், படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐந்து குழுவின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர். பேரவையில் பிரதிநிதிகள் மட்டுமன்றி உறுப்பினர் முழுவதுமே இருந்தனர். பேரவையின் முடிவையே ஐம்பெருங்குழு தன் முடிவாய் அரசனுக் குரைத்தது.

எண்பேராயம் கர்ணத்தார் அல்லது கணக்கர், கரும விதிகர் அல்லது நிறைவேற்றல் துறையாளர், கனகச் சுற்றம் அல்லது பொருள் காப்பாளர், கடை காப்பாளர் அல்லது அரண் காவலர், நகர மூப்பர், படைத்தலைவர், யானை மறவர், குதிரை மறவர் என்பவர்கள்.

அரசனில்லாத நேரம் ஆட்சிப் பொறுப்பு அரசியற் பொறுப்புச் சுற்றம் என்ற குழுவின் கையில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அதில் ஆசான் அல்லது குரு, பெருங்கணி அல்லது கணக்குத் தலைவர், அறக்களத் தந்தணர் அல்லது அறநடுவர், காவிதி அல்லது வரிபிரிப்பவர், மந்திரக் கணக்கர் அல்லது திருவாணை எழுதுவோர் இருந்தனர்.

18-19ஆம் நூற்றாண்டுவரை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய வாணிகக் கழக ஆட்சிக் காலம்வரை மக்கள் பேரவையின் உறுப்பினர்களான 'நாயர்'களின் குடியுரிமைக்குக் கட்டுப்பட்டே ஆண்டதாகப் பிரிட்டிஷ் ஆட்சி மேற்பார்வையாளர் கடிதங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் திறத்தில் மேற்சொன்ன பண்புகளே தமிழர் சமயஞ் சாராத சங்ககால இலக்கியமாகவும், சமயஞ் சாராத பொங்கல், ஓணம் முதலிய விழாக்களாகவும், தமிழ்ச் சங்கம் முதலிய கலை நிறுவனங்களாகவும் குடும்பத்தினுள்ளே காதல்- வீர மரபுகளாகவும் இயங்கி வந்துள்ளன.