பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(106

அப்பாத்துரையம் – 2

தொல்காப்பியப் பாயிரத்தில் பாயிரம் எழுதியதாகக் குறிக்கப்படும் பனம் பாரனார் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனத் தொல்காப்பிய ஆசிரியரைக் குறிக்கிறார். இதில் ஐந்திரம் என்பது பாணினிக்கு முற்பட்ட ஐந்திர இலக்கணமே என்று உரையாசிரியர் பலர் கருதுகின்றனர்.

தொல்காப்பிய வேற்றுமையியலில் 'வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை' என்ற சூத்திரத்தில் 'ஏ' காரத்தை மறுப்பு ஏகாரமாகக் கொண்டு உரையாசிரியர்கள் அகத்தியர் சூத்திரமொன்றை மேற்கோள் காட்டுகின்றனர். அதில் 'இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்' என்ற குறிப்புக் காணப்படு கின்றது. அகத்தியர் கதையை அடிப்படையாகக் கொண்டு அகத்தியர் ஐந்திரத்தை எதிர்த்துப் பாணினியை ஆதாரமாகக் கொண்டாரென்றும், தொல்காப்பியர் ஐந்திரத்தை ஆதரித்தாரென்றும் உரையாசிரியர் சிலர் கருதுகின்றனர்.

அகத்தியர் கதை மரபுபோலவே ஐந்திரமரபும் போதிய தெளிவான சான்றுகளற்றதாயுள்ளது. ஏனெனில், அகத்தியர் சூத்திரத்தில்தான் 'இந்திரன்' என்று ஐந்திர ஆசிரியர் பெயர் காணப்படுகிறது. தொல்காப்பியப் பாயிரம் ஐந்திரத்தைத்தான் குறிக்கிறது. இந்திரனைக் குறிக்கவில்லை. ஐந்திரம் இந்திரன் எழுதிய இலக்கணம் என்றும் தெளிவாகக் கொள்ள வழியில்லை. ஐந்திரம் என்பது ஐந்திரம் அல்லது ஐந்திலக்கணமே, (அதாவது எழுத்து, சொல், பொருள், மரபு, அணி என்ற ஐந்து இலக்கணத் துறைகளே) என்று சொல்லுவதும் உண்டு.

தொல்காப்பியர் முன்னூல்களைப் பொதுவாகக் குறித்த தன்றி. அகத்தி யரையோ, பாணினியையோ, இந்திரனையோ, ஐந்திரத்தையோ குறிப்பிடவில்லை.

சில உரையாசிரியர்கள், சிறப்பாக நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் பாணினிக்கு முற்பட்டது என்றும், இன்றைய வேதங்களை நான்காக வகுத்த வேதவியாசர்க்கும் முற்பட்டது என்றும், ஆனால் ஐந்திரத்துக்குப் பிற்பட்டது என்றும் கட்டுரைத்துள்ளார்.