110
அப்பாத்துரையம் - 2
இலக்கியம் அமைந்து நெடுநாள் கழிந்தபின்பே மொழிக்கு இலக்கணம் அமைதல் இயல்பு. ஆனால், உலகின் பெரும்பாலான மொழிகளில் இலக்கணம் பிறமொழித் தொடர்பினாலேயே ஏற்பட்டது. இத்தகைய இடங்களில் இலக்கணம் மொழி கற்பவர்க்கு ஒரு துணைக் கருவியாக இருந்ததால், அது மொழியின் இலக்கணமாக மட்டுமே அமைந்தது. கிரேக்க இலத்தீன மொழிகள், அரபு எபிரேய மொழிகள், சமற்கிருதம் முதலிய எல்லா உலகமொழிகளின் நிலையும் இதுவே. ஆனால், தமிழ் ஒன்றில் மட்டுமே தொடக்கக் காலத்திலிருந்து மொழிக்கும் இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் அமைந்தது. தமிழில் இலக்கணம் என்ற சொல் மொழிக்கும் இலக்கியத்துக்கும் உரிய இலக்கணம் என்று பொருள்படும். மற்றெல்லா மொழிகளிலும் இலக்கணம் என்பதற்குச் சரியான சொற்கள் (ஆங்கிலம்: கிராமர், Grammer; சமற்கிருதம் வ்யாகரணம்) மொழியின் இலக்கணம் அல்லது இயல்பு மட்டுமே குறிக்கும்.
'உலக வழக்கும் செய்யுள் வழக்கும்' இலக்கணத்துக்கு இலக்கியமாகக் குறித்த இலக்கண மரபு தமிழ் இலக்கண மரபு ஒன்றே.
சமற்கிருத இலக்கண இலக்கியங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பின்பற்றியவையே
ற
பிராதிசாக்கியங்கள் வேதமொழிக்குரிய இலக்கணம். அதனையடுத்த முதல் சமற்கிருத இலக்கணம் பாணினியமே. பாணினியின் காலத்தில் வேத உபநிடதங்கள் தவிர வடபுலத்தில் இலக்கியம் கிடையாது. இலக்கிய மொழியாகிய சமற்கிருதம் அன்று பிறக்கவும் இல்லை. பாணினியின் இலக்கணம் சமற் கிருதத்தின் இலக்கணமாய்ப் பிற்காலத்தில், கருதப்பட்டாலும் சமற்கிருதம் என்ற பெயரே அவர்காலத்தில் இருந்ததில்லை. அவர் இலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதம் வளர்ந்தது உண்மையாயினும், அவர் இலக்கணம் எழுதியது சமற் கிருதத்துக்குமன்று, சமற்கிருதத்துக்கு முற்பட்ட, ஆனால், வேதமொழிக்குப் பிற்பட்ட ஒரு மொழியிலேயே அவர் வேதமொழியைக் 'கீர்வாணம்' என்றும் தம் இலக்கணத்துக்குரிய 'புது' மொழியைப் 'பாஷா' என்றுமே குறிப்பிட்டார். ‘பாஷா’ என்ற சொல் இன்னும் சமற்கிருதத்தில் தாய்மொழியைக் குறிக்கும்.