பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

அப்பாத்துரையம் - 2

செறிவு, செப்பம் ஆகிய யாவும் ஒருங்கே பொருந்தியது. சங்க இலக்கியத்தின் நயம் பிற்கால இலக்கியங்களுக்கு எட்டாதது. இவற்றின் மறைதிறவு யாது? தனித் தமிழே என்னலாம்!

தவிர, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிப் பண்பு, தனி ஓசை நயம் உண்டு. ஜெர்மன் மொழிக்கு ஆற்றல், ஆங்கில மொழிக்கு வலிமை, ஸ்பானிய மொழிக்கு வீறு, பிரஞ்சு மொழிக்கு நயம், இத்தாலிய மொழிக்கு இனிமை ஆகியவை அவ்வம் மொழித் தனிப்பண்புகள் ஆகும். சமற்கிருதத்துக்கு வீறமைதி, இந்துஸ் தானிக்கு ஆண்மை, பாரசீக மொழிக்குச் சந்த நயம் ஆகியவை முயற்சியின்றி அமைபவை. அதுபோலவே, தெலுங்குக்கு இன்னோசை, கன்னடத்துக்கு மென்மை, மலையாளத்துக்குக் கவர்ச்சியுணர்வு, தமிழ்க்கு நுண்ணயம் ஆகியவை இயல்பானவை. பிறமொழிக் கலப்பு இவற்றைச் சற்றுக் குலைக்கலாம். அழிக்கமாட்டாது. கவிஞர் கையில், சிறப்பாக உணர்ச்சி மிக்க கவிதைக் கட்டங்களில் தாய்மொழிச் சொற்கள் இயல்பாக மேம்பட்டு, தாய்ப்பண்பு ததும்பிப் பொங்கி விடுவது காணலாம்.

இந்தப் பண்பைக் காக்க, அதை வளர்க்க, அதில் வெறிகொள்ளக்கூட எவரேனும் முயன்றால், அது தவறா? கவிதையுணர்வுடையவர் தம்மையறியாது அவ்வப்போது வளர்க்கும் இப்பண்பை மொழியார்வலர், எழுத்தாளர் தெரிந்து திட்டமிட்டுச் செய்வது தவறாகமாட்டாது!

தனித்தமிழ் வெற்றி, தமிழின் வெற்றியே

ஒவ்வொரு மொழியிலும் அதன் தூய தாய்மொழிச் சொற்களே தாய் இனத்துடன் நீடித்துப் பழகி ஊடாடிய மிகப் பழைமையான சொற்கள். தாய் இன மரபில் வந்த மக்களின் நாடி நரம்புகளையும் உள்ளத்தையும் அத்தகைய சொற்களைப்போல் இடையில் வந்தேறி இடையிலே அழிந்துவிடத்தக்க வேரற்ற சொற்கள் தடவி உணர்ச்சி எழுப்ப முடியாது.

தூய தாய்மொழியை விரும்பியவர்கள் எல்லாரும் அதைப் பயின்று வெற்றி காணவில்லை. இஃது இயல்பே. ஆனால் இஃது அவர்கள் கலைப்பண்பின் குறைபாடேயன்றி அவர்கள் கோட்பாட்டின் தவறுதலன்று.