பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

அப்பாத்துரையம் - 2

ஒருங்கே வளர்க்கின்றன. எடுத்துக்காட்டாக மின் ஆற்றலுக்கு ஒரு புதிய சொல் வகுக்கப்பட்டால் மின்னல், ஆற்றல், மின்னாற்றல் என்ற மூன்று கருத்துகளுக்கு மூன்று வேறு வேறு தொடர்பற்ற சொற்கள் இருக்கும். ஆங்கிலத்தின் நிலை இதுவே. (Lightning, Power, Electricity). மூன்று கருத்துகளுக்கு மூன்று சொற்களை மொழியினத்தின் மூளை சுமத்தல் வேண்டும். தாய்மொழிப் பண்புடைய மொழிகளிலோ இவை இருசொற்களாலேயே குறிக்கப்படும். இது சிக்கன வழிமட்டுமன்று. இயற்கை அறிவு வழியும் இதுவே. ஏனெனில், மின் ஆற்றலில் புதிய அறிவை, மின்னல், ஆற்றல் என்ற பழைய அறிவுடன் தொடர்புபடுத்தி, புதிய சொல்லுடன் பொருளையும் பொருட் பண்பையும் அது மொழியினத்தில் ஆழப் பதியவைக்கிறது.வேரூன்றிய இவ்வறிவின் வளர்ச்சி மேலீடான பிற மொழியினங்களின் வளர்ச்சி தாண்டி முன்னேற முடிகிறது.

வருங்கால உலக மொழிப் பண்பு

ஒருசில வேர்ச் சொற்களின் அடிப்படையாக, சில பல சொற்குடும்பங் களாக, பல திரிசொற்கள் அல்லது கருத்துக் குறியீடுகள் அமைவதே வருங்கால உலக மொழிக்குரிய பண்பு என்று கண்டனர், அடிப்படைமொழி இயக்கத்தார்! இப்பண்பை ஆங்கிலத்திலும் இந்துஸ்தானியிலும் புதுவதாக வளர்க்கவே அவர்கள் அடிப்படை ஆங்கில இயக்கம், அடிப்படை இந்துஸ்தானி இயக்கம் கண்டு, அவற்றை வளர்த்துவருகின்றனர். ஆனால், தமிழ்க்கு இத்தகைய அடிப்படைத் தமிழ் இயக்கம் புதிதாக வளர்க்கப்படவேண்டுவதில்லை. ஏனென்றால், தனித்தமிழ் இயக்கம் உலகின் முதல் அடிப்படையியக்கம் மட்டுமன்று, இன்றும் உலகின் தலை சிறந்த அடிப்படை மொழி இயக்கமாகவே இயங்கிவருகின்றது.

உலகின் அடிப்படைமொழி யியக்கத்துக்குத் தனித் தமிழ் இயக்கம் தந்த தூண்டுதல் இன்னும் தமிழரே அறியாத ஒன்று. ஏனெனில், அது நேரடித் தூண்டுதலன்று. தனித் தமிழ்ப் பண்புடன் இயைந்த தாய்மொழிப் பண்பில் இரஷ்யா சிறப்பாகவும்; ஜெர்மன், சீனம் பொதுவாகவும் அடைந்த முன்னேற்றத்தின் மூலமான சுற்றுமுகத் தூண்டுதலே அது!