பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146 ||-

அப்பாத்துரையம் - 2

இலக்கணத்துக்கு எழுத்து வடிவின் இயல்பான சிறப்பின்றி வேறு சிறப்புக் கிடையாது.

தனித் தமிழியக்கத்தின் இன்றைய தலைவர்களான தேவநேயப்பாவாணர் போன்றோர் உலக உலக வழக்காகிய பேசுந்தமிழின் சிறப்பறிந்து, தனித்தமிழ் எல்லைக்குள் அதனைக் கொண்டுவந்துள்ளனர்.

பேசும் தமிழ் உயிர்த் தமிழ்! இலக்கியத்தில் காண முடியாத வளம் அதற்குண்டு.எடுத்துக்காட்டாகத் தொழிலாளர் கருவிகள், வீட்டுத்தட்டுமுட்டுப் பொருள்கள், பழைமை வழக்குகள், திணை நில வழக்குகள் ஆகியவை இலக்கியம் சார்ந்த மொழிக்கும் மொழி நூலுக்கும் வளம் தருவன ஆகும். இத்துடன் வழக்கத்திலுள்ள சொற்கள் பொருள் தருவதுடன் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, மரபுப் பண்பு பேணி, உயிர்த்துடிப்புடையனவாக இயலும். வருங்காலத் தமிழரின் கலைச்சொல் ஆக்கத்தில் தனித்தமிழின் இலக்கிய வழக்கு மட்டுமன்றி அதன் உயிர் முதல் வழக்கும் பேரிடம் பெறவேண்டும், பெறுவது உறுதி. தமிழ்ச் சொற்களே யன்றித் தொலைத் தமிழினச் சொற்களும் தொல் பழந்தமிழ்ச் சொற்குவையின் கூறேயாதலால், தக்கவழி பயன்படுத்திக் கொள்ளக் கூடியவை என்பதில் ஐயமில்லை.

சமற்கிருதப் பற்றிலும் அயல் மொழித் தொடர்பிலும் அறிவிலும் மிகக் குறைந்த மக்கள் நாட்டுப்புற மக்களும், தாழ்ந்த குடியினராகக் கருதப்படும் இனப் பொது மக்களுமேயாவர். அவர்கள் பேச்சு நடை இன்றும் தனித் தமிழ் நடையாகவும், சங்க இலக்கியத்துக்கு மிகவும் அணிமை உடைய நடையாகவுமே உள்ளது. வருங்காலத் தனித் தமிழ் இயக்கம் தமிழையும் அவர்களையும் முன்னிலும் நெருக்கமுடைய தொடர்புடைய வராக்கும் என்று நம்பலாம். அப்போதுதான் அது மக்கள் தமிழ், தேசியத் தமிழ், குடியாட்சித் தமிழாக இயங்கும். அது தமிழ்க்கும் தமிழகத்துக்கும் உலகுக்கும் வளந்தரும் பொங்கற் பண்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.