182
அப்பாத்துரையம் - 2
காலத்தில் எழுந்து வளர்ந்தன. ஒவ்வொரு காலத்தில் புகழ் பரப்பிப் பாராட்டப் பெற்றுள்ளன. ஆனால், எல்லாக் காலத்திலும் எல்லாராலும் எல்லாவகைப் பட்டவராலும் எப்போதும் போற்றப்பட்டு வரும்நூல்-தமிழகத்திலும் வெளியுலகிலும் ஒருங்கே புகழ் பரப்பிய தனிநூல் திருக் குறளேயாகும்.
கம்பராமாயணச் சிறப்பு
இந்திய மொழிகளுள் இராமாயணம், பாரதம் இல்லாத மொழிகள் கிடையா. சமற்கிருதம் உட்பட எல்லாப் பிற மொழிகளிலும் இராமாயணமோ, தவறினால் பாரதமோதான் முதல் இலக்கியப் படைப்பாக அமைந்துள்ளது. ஆனால், இவை அனைத்திடையேயும் கூடத் தமிழ்க் கம்பராமாயணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதன் மூலம் தமிழ்க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில், அது தாய்மொழி இராமாயணங்கள் அனைத்திலும் காலத்தால் முற்பட்டது. அளவில் அது வால்மீகி ராமாயணத்துக்கு ஒப்பானது; பெருமையில் வால்மீகி இராமாயணத்துடன் போட்டியிட்டுவருவது.
மற்ற மொழி இலக்கியங்களில் இராமாயணம் முதல் நூல். ஆனால், தமிழில் கம்பராமாயணம் முதல் நூலும் அன்று. முதல் முதல்நூலும் அன்று. முதற் காலமாகிய பண்டைக்கால நூலும் அன்று. இடைக்கால நூல்களில்கூட அதுவே கடைசிநூல் என்னலாம். அதன்பின் எழுந்த தமிழிலக்கியம் தளர்ச்சிக் கால இலக்கியம். அல்லது இக்காலப் புதுமலர்ச்சி இலக்கியமே.
கம்பராமாயண ஆர்வலர் அறியாத இன்னும் சில சிறப்புகள் அந்நூலுக்கு உண்டு. தாய்மொழி இராமாயணங்களுள் அது பழைமை மிக்கது மட்டுமன்று; வால்மீகி இராமாயணத்தைப் போலவே அது தாய்மொழி இராமாயணங் களுக்கெல்லாம் மூல முதல் நூல் ஆகும். தமிழகத்தில் உலவிய பழைய இராமாயணக் கதை மரபுகளைத் திரட்டி வால்மீகியின் இராமாயணத்துடன் அஃது இணைத்தது. அத்துடன் தமிழகத்திலிருந்து எழுந்த வைணவ மறுமலர்ச்சிக் கருத்துகளை உடன்கொண்டு அஃது எல்லாத் தாய்மொழி இராமாயணங்களுக்கும் வழி காட்டிற்று.