பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

அப்பாத்துரையம் - 2

பிந்தியவை காலத் தளர்ச்சிக்கேற்ற அவருடைய அவலப் பண்புகள்.

அவர் தனிப்பட்ட நற்பண்புகளுள் ஒன்று அவர் தீந்தமிழ் நடை, உரை நடையில் அவர்க்கு ஒப்பான செறிவு, இனிமை, தெளிவு, நயம் ஆகியவற்றின் இணைவை நாம் வேறெங்கும் காண முடியாது. கவிதையில் திருக்குறளுக்கு இருக்கும் சிறப்பை உரைநடையில் தாம் பெற அவர் எண்ணினார் என்னலாம். அதை அவர் மிகுந்த அளவிலே பெற்று வெற்றி கண்டுள்ளார் என்பதில் ஐயமில்லை.

கருத்தில் சமற்கிருதச் சாய்வாகவே இருந்தவர் அவர். ஆயினும், சொல் நடையில் வியக்கத்தக்க முறையில் அவர் சீரிய தனித்தமிழ் நடைபேணினார்.

சமற்கிருதச் சார்பாக வலிந்து பொருள்கொண்ட இடங்கள் நீங்கலாகப் பிற இடங்களில், அவர் திருவள்ளுவர் உள்ளங் கண்டு அவர் சொற்போக்குப் படியே பொருள் நாடுவது காணலாம்.

தாம் கருதிய பொருளில் ஐயப்பாடு கண்டவிடத்தில், கூடியமட்டும் திருவள்ளுவர் சொல்லுக்கு மாறுசொல் தாராது சொல்வது அவர் வழக்கம். மேலே தெய்வம் என்ற சொல்லுக்கு அவர் உரை கூறியிருக்கும் முறை இதற்கொரு சான்று ஆகும். பிறவும் காண்டல் எளிது.

இச் சிறப்புகள் பரிமேலழகரின் அடிப்படைக் குறை பாட்டை மறுமலர்ச்சிக் காலத் தமிழரிடமிருந்து மறைக்கப் பயன்ப வில்லை. திருவள்ளுவர் விலக்கியதாக அவரே உரைப்பாயிரத்தில் குறிப்பிடுகிற சுமிருதிகளில், கண்ட கூறுகள், வழக்கு, தண்டம் ஆகியவை, அருவருப்பான இக் கருத்துகளைத் திருவள்ளுவர் கருத்துகளுக்குப் பின்னணியாகவும், இடைப்பெய்தலாகவும், விளக்கமாகவும் அவர் தெரிந்தும் தெரியாமலும் புகுத்தி இடர்ப்படுகிறார். திருக்குறளில் காணப் படாத பெண்ணடிமை, பிறப்பு வேறுபாடு, சாதி வருண ஆசிரம மரபுகள் வெறுப்புத் துறவு, கொலை வேள்வி, சிரார்த்தம் முதலிய சடங்குகள் ஆகிய கருத்துகளை அவர் வலிந்து திருக்குறட் கருத்துகளுடன் பொருத்திக் காட்ட முயல்கிறார். இதில் அவர் கண்ட இடர்ப் பாடுகளும் தோல்விகளுமே மறுமலர்ச்சி ஊழியை ஊக்கும் உயிர்விதைகளாய் இருந்தன என்னலாம்.