தென்மொழி
191
இந்நிலையிலும், சுமிருதிகள் முதலிய சமற்கிருத மரபுகள் திருக்குறளுக்கு மூலமாவன என்று தம் கால நிலைக்கொத்துப் பரிமேலழகர் கொண்டாலும், சிற்றறிவுடைய மாந்தர் இயற்றிய அவ்வேடுகளைக் காட்டிலும், தெய்வப்புலவர் திருவள்ளுவரது தெய்வத் திருக்குறள் மேம்பட்டதென்றே அவர் கருதியதாகத் தோற்றுகிறது.
சுமிருதி அடிப்படையில் அறம் (சமற்கிருதம்: தருமம்) என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று கூறுடையது என்றும், இவற்றுள் வழக்கும் தண்டமும் கால கால தேய மாறுபாட்டுக்கேற்ப மாறுபவை என்றும், அதனாலேயே திருவள்ளுவர் அவற்றை விலக்கி நிலையான பயனுடைய ஒழுக்கம் மட்டுமே கூறினாரென்றும் பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் கூறுகிறார். "இவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடை ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது" என்கிறார்.
சமற்கிருதத்தைத் தெய்வமொழி எனக் கருதியிருந்தவர் அவர். ஆனால், சமற்கிருத சுமிருதிகளை அவர் அவ்வாறு கருதவில்லை.“அவற்றை அவர் மனித ஏடுகளென்றே கருதினார். ஆனால், தமிழ் மனித மொழியானாலும், அதில் அறநூல் இயற்றிய திருவள்ளுவரை அவர் தெய்வப்புலவர் என்று கருதினா ரென்பது தெளிவு.
சமற்கிருதப் புராண இதிகாச ஆர்வம் மேலிட்டு, சுமிருதி யார்வலர் ஆதிக்கம் வலுத்துவந்த காலத்தில், திருக்குறளுக்கு மறைமுகமான எதிர்ப்பும் புறக்கணிப்புத் திரையும் இருந்துவந்திருத்தல் இயல்பு. அத்தகைய காலத்தின் போக்கை 9ஆம் நூற்றாண்டுக்குப்பின் வந்த வீர சோழியம், இலக்கணக் கொத்துப் போன்ற இலக்கணங்களும் சேனாவரையர் போன்ற உரையாசிரியரும் காட்டுகின்றனர். பரிமேலழகர் அவர்கள் சார்பில் நின்றே திருக்குறளுரையில் திருக்குறளுக்கு விளக்கம் செய்கிறார் என்னலாம். அவர் சமற்கிருதச் சார்புக்குக் காரணம் இதுவே. ஆனால், அவர்க்குத் திருவள்ளுவரிடம் இருந்த மதிப்பு, சேனாவரையர்க்கும் இலக்கணக் கொத்து ஆசிரியர்க்கும் தமிழ் மொழியில் இருந்த மதிப்பைவிடப் பெரிது என்பதில் ஐயமில்லை.