192
கதை மரபு
அப்பாத்துரையம் - 2
தொல்காப்பியத்தின் பெருமையை மறைக்க அகத்தியர் கதை மரபு பயன்பட்டது. அதுபோலவே திருக்குறளின் பெருமையைப் பொதுமக்கள் கண்களிலிருந்து மறைக்கவும், அறிஞர் கருத்தைக்கூட அதிலிருந்து திருப்பவும் வள்ளுவர் கதை மரபு பயன்பட்டது.
வள்ளுவரைப்பற்றி அகச்சான்று புறச்சான்றுகளால் நமக்குத் தெரியக்கூடியது ஒன்றுமில்லை என்று கூறலாம். அவர் இயற்பெயர் இன்ன தென்றுகூட நமக்குத் தெரியவில்லை. வள்ளுவர் என்பதே அவர் இயற்பெயரா, குலப் பெயரா, தொழிற்பெயரா என்று வரையறுத்துணர வகை எதுவும் கிடையாது. பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை
பற்றிய
நிலையும்
இதுவே. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கதை மரபாளர் கவலைப்படவில்லை. அவர்கள் துணிந்து அவர்க்கு ஒரு மனைவி கொடுத்தனர்-மனைவிக்கு வாசுகி என்ற பெயரும் கொடுத்தனர். அவர்க்கு உடன் பிறந்தார்களாக அவ்வையார், உப்பை, உறுவை, வள்ளி, கபிலர், அதிகைமான் ஆகிய அறுவரை இணைத்தனர். அவர்களுள் சிலர் பெயர்கள் கற்பனைப்பெயர்கள்; மற்றவர்கள் திருவள்ளுவருடனோ. ஒருவர்க்கொருவரோ தொடர்பு அற்றவர்கள். அது மட்டுமன்று, அவர்கள் எவரும் திருவள்ளுவர் காலத்திலே வாழ்ந்தவர்களல்லர். அவர்க்குப் பிற்பட்டவர்கள். ஆனால், அவை பற்றியும் கதை மரபாளர்கள் கவலைப் படவில்லை.அவர்கள் துணிந்து அவர்க்குப் பகவன் என்ற பார்ப்பனத் தந்தையையும், ஆதி என்ற புலைச்சித் தாயையும் படைத்துத் தம் கருத்துக் கேற்றதொரு புனைகதை கட்டினர்.
இக் கதையைத் தரும் புலவர் புராணம் கதைக்கு நாடகச்சுவை அளிக்கும் முறையில் கதையுடனிணைந்த பல தனிப்பாடல்களையும் தருகிறது. தவிர, கதை மரபுக்கு ஒரு சான்றளிப்பதுபோல, 'கபிலர் அகவல்' என்ற பெயருடன் ஒரு நூல் உலவுகின்றது.அதன் ஆசிரியர் தம்மைத் திருவள்ளுவரின் உடன்பிறந்தார் என்று கூறுவதுடன், புலவர் புராணத்தின் கதையையும் கூறி, அதற்குச் சான்று பகர்கிறார். இவ்வளவும் செய்தபின் அவர் சாதி முதலியவற்றை எதிர்த்து அவர் காலத்துக்கேற்ற சில சீர்திருத்தக் கருத்துகளையும் குறித்துச் செல்கிறார்.