பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்மொழி

193

கபிலர் அகவல் ஓர் இடைக்காலத்துச் சித்தர் பாடல் என்பதில் ஐயமில்லை. சித்தர்கள் முற்போக்கான கொள்கை யுடையவர்களே. கபிலரகவல் கதை வழங்கிய காலத்தில் ஒரு சித்தர் கபிலர் வாய்மொழியாக அதைக் கூறினாராதல் வேண்டும்.

திருவள்ளுவர் பிறப்பு வளர்ப்புக் கதை முற்றிலும் போலியானது என்பதற்கு நீண்ட ஆராய்ச்சி தேவையில்லை. பல்வேறுபட்ட நிலையில் விடப்பட்டு வளர்ந்து புகழ்பெற்ற அதிகைமானும் கபிலரும் அவ்வையாரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதைக் கதை எழுதியவர் எப்படி அறிந்திருக்கக் கூடும் என்பதைக் கதை காட்டவில்லை. கபிலரகவல் தவிர, மற்றக் கபிலர் பாடல்களிலிருந்தும் அவ்வையார் பாடல்களிலிருந்தும் அதை அவர்கள் அறிந்திருந்ததாகவோ, அறிந்து செயலாற்றிய தாகவோ தெரியவில்லை. உண்மையில் அவர்கள் காலப் புலவர்கள் திருவள்ளுவர் புகழைப் பழம் புகழாகவே குறித்துள்ளனர்.

திருவள்ளுவர் அதிகைமாற்கும் அவ்வையார்க்கும் கபிலர்க்கும் காலத்தால் மிக முற்பட்டவர் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அம் மூவர் காலத்து அரசர்களுக்கும் முற்பட்டவன் செங்குட்டுவன். அவனைப் பாடிய சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் அவர் பாடலையும் குறிப்பிட்டு அவர் புகழையும் நிலைநாட்டிவிடுகின்றன.

திருவள்ளுவர் கதை மரபு வழங்கிய காலம் பிறமொழிப் புலவர்களுக்கும் இதே போன்ற கதைகள் வழங்கிய காலமே ஆகும். மலையாளக் கவிஞன் எழுத்தச்சனும் சமற்கிருதக் கவிஞன் காளிதாசனும் தம் மரபு புலமை ஆகியவற்றைத் தாமே குறித்துச் சென்றுள்ளனர். எழுத்தச்சன் தன்னை உயர்குடி நாயர் மரபினர் என்று கூறுகிறான். காளிதாசன் தன்னைப் புலவர் மரபில் வந்த பார்ப்பனப் புலவன் என்கிறான். ஆனால், கதை மரபுகள் எழுத்தச்சனைப் பார்ப்பான், இழிகுல நாயர் நங்கை மகன் என்கின்றன. காளிதாசனை உவச்சன், காளியருளால் வாயும் புலமையும் பெற்ற ஊமை மூடன் என்கின்றன.

திருவள்ளுவரின் மற்றொரு கதை மரபு திருக்குறள் அரங்கேற்றம் பற்றிய கதை. அதில் அரசனாகப் பாண்டியன்