200
அப்பாத்துரையம் - 2
திருவள்ளுவர் சமயச் சார்பற்றவர். ஆகையினாலேதான் இந்த நடு நிலையைக் காண்கிறோம் என்று சிலர் எண்ணக்கூடும். இதுவும் மெய்ம்மை யன்று. ஏனெனில், மெய்யாகவே சமயச் சார்பற்ற ஒரு நூல் சமயத்துக்கு எதிரானதாய் இருந்தால் அதனைக் ‘கடவுள் இல்லை' என்பவர்தாம் ஏற்கமுடியும். கடவுட் பற்றுடையவர் ஏற்க முடியாது. அது சமயத் தொடர்பே அற்றுக் கணக்கு நூல், இயல்நூல் போன்றதா யிருந்தால், சமயவாணர் அதை 'இஃது எமது', 'இஃது எமது' என்று கூறவோ, கூறிப் பெருமையடையவோ முனையமாட்டார்கள்.
'திருவள்ளுவர் அருட் சான்றோர். ஆகவே, எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படையையே அவர் எடுத்தாண்டுள்ளார்' என்று திருக்குறளின் தனிப் புகழ்க்கு நாம் விளக்கம் காணலாம்.
இதுவும் ஒருபுடை உண்மை மட்டுமே; முழு உண்மை யாகாது. தம் காலச் சமயங்களின் பொது அடிப்படையைத்தான் திருவள்ளுவர் எடுத்துரைத்திருக் கிறார் என்று கூற முடியும். நம் காலக்கிறித்துவநெறி, இசுலாமிய நெறிகளை அவர் முன்னறிந்து எடுத்துரைத்திருக்கிறார் என்று கூற முடியாது.
'எல்லாச் சமயங்களின் அடிப்படையும் உண்மையில் ஒன்றே. ஆகவேதான், அந்நாளைய சமயங்களின் அடிப்படையாக வள்ளுவர் வகுத்த பண்புகள் இந்நாளைய சமயங்கள் உட்பட எல்லாவற்றின் அடிப்படையாக விளங்குகிறது' என்று நாம் மேற்கண்ட கூற்றைத் திருத்திக் கொள்ளலாம்.
இக் கருத்தின் மூலம் திருவள்ளுவரின் உள்ளத்தை நோக்கி நாம் ஒரு படி முன்னேறுகிறோம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இதில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால், அது முழு அளவில் உண்மையன்று. கால தேயச் சுவடுகள் திருவள்ளுவர் நடுநிலைமீது பொறிக்கப்படாமல் இல்லை. காலம் கடந்த தனித் தன்மையின் சுவடுகளும் அவரிடம் உண்டு. அவர் பெருமையில் இவையும் பகுதிகளேயாகும்.
காலதேயக் சுவடுகள்
திருவள்ளுவர் புகழும் பெருமையும் காலதேயங் கடந்தவை. ஆனால் கருத்திலும் உரையிலும் காலதேயச் சுவடுகள்