பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

அப்பாத்துரையம் - 2

'பெண்வழிச்சேறல்' என்ற அதிகாரம் ஓரளவு காலச் சுவட்டைக்குறிப்ப தாகலாம். சிலர் இங்கே 'பெண்' என்பது பொது மகளிரைக் குறித்தது என்று கருதலாம். ஆனால், குறட்பாக்கள் ‘இல்லாள்', ‘மனை' என்ற சொற்களையே வழங்குகின்றன. முனைவர் வரதராசனார் முற்போக்குக் கருத்துகளை இதில் காண முடியாமல் உளைவுறுகின்றார். இப்பகுதியைக் காலத்தின் சுவடு என்றே கொள்கின்றார். இது காலத்தின் சுவடு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.ஆனால்,திருவள்ளுவர் பெண்மைக்குத் தரும் உயர்வு மேனாட்டினரும் இன்று தாராத ஒன்று. எனவே இங்கே வள்ளுவர் பெண்ணுக்கு இழுக்கம் கூறுவதாக எண்ணுதல் பொருந்தாது.பெண்ணுக்குப் பொதுக்கடமை புறம்,சிறப்புக்கடமை அகம்; ஆணுக்குப் பொதுக்கடமை அகம், சிறப்புக்கடமை புறம் என்ற பாகுபாட்டையே இவ்வதிகாரம் வற்புறுத்துகிறது என்பது தெளிவு.

திருவள்ளுவரின் பொதுப்பண்பை இந்தக் காலத் தேயச் சுவடுகள் கெடுக்கவில்லை. ஏனென்றால், இச்சுவடுகள் அப்பொதுப் பண்பின் மீதே பொறிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர்க்குத் தனிப் பண்புகளும் உண்டு. ஆனால், இவை பொதுப் பண்பு. கால தேயப் பண்புகளுக்கு மாறுபட்டவை யல்ல. ஏனெனில், அத் தனிப் பண்புகளும் அவ்விரண்டின் மீது கட்டிஎழுப்பப்பட்டவையே.

தனிப் பண்பின் தடம்

கொல்லாமை நெறி சைவ, வைணவங்களைவிடப் புத்த சமண நெறிகளுக்குச் சிறப்புரிமை யுடையதென மேலே கூறினோம். ஆனால், இது மேலீடான உண்மை. முழு உண்மையன்று. அதன் மீது திருவள்ளுவரின் தனிப் பண்பின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. சமணர்க்கும் புத்தர்க்கும் மட்டுமன்றி மற்றச் சமயத்தவர்களுக்கும் அஃது ஒரு கோட்பாடு. தனி உயிர் உலகக் கட்டிலிருந்து விடுபட்டுத் தனி விடுதலை (மோட்சம்) அடைவதற்கு அஃது ஒரு படியாகவே அச்சமயங்களில் கொள்ளப்படுகிறது. ஆனால், திருவள்ளுவர்க்கு அதுவே அவர் கோட்பாட்டின் அடிப்படை.